Police Department News

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் 80 சதவீதம் குறைந்துள்ளது: டி.ஜி.பி. சைலேந்திரபாபு

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் 80 சதவீதம் குறைந்துள்ளது: டி.ஜி.பி. சைலேந்திரபாபு

தென்காசியில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்காசி, கன்னியாகுமரி, தேனி, கோவை ஆகிய கேரள மாநில எல்லைகள் இருக்கும் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகிறோம். கூடுதலாக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அங்கு அவசியம் கருதி மேலும் கூடுதல் பாதுகாப்பு தேவை என்று கருதினால் உடனடியாக போலீசார் அனுப்பிவைக்கப்படுவார்கள்.

போதைப்பொருள் இல்லாத தமிழகம் என்பதுதான் முதல்-அமைச்சரின் திட்டம். அந்த வகையில் கஞ்சா வேட்டை 1, 2, 3 என்று நடத்தப்பட்டு, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சுமார் 20 ஆயிரம் பேரை கைது செய்துள்ளோம். இவர்களில் 2 ஆயிரம் பேரின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளோம். சுமார் 750 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போலீசாரின் இந்த நடவடிக்கைகளின் காரணமாக போதைப்பொருட்களின் நடமாட்டம் 80 சதவீதம் குறைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் பல பகுதிகளில் போதைப்பொருட்களே இல்லை என்று கூறும் நிலை வந்துள்ளது. போதைப்பொருள் இல்லாத பகுதி என பல போலீஸ் நிலையங்கள் அறிவித்து உள்ளன. அடுத்தகட்டமாக போதைப்பொருட்கள் இல்லாத மாவட்டங்கள் என அறிவிக்க உள்ளனர். போதைக்கு அடிமையான பலர் போதைப்பொருட்கள் கிடைக்காததால் அதற்கு பதிலாக மருந்து, மாத்திரைகளை பயன்படுத்தலாம் என்று தகவல் வருகிறது. காவல்துறை, வருவாய்த்துறை, மருத்துவ துறை ஆகியவை இணைந்து இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.