Police Department News

சென்னையில் தீயணைப்பு படை வீரர்களுக்கான மனநல மருத்துவ ஆலோசனை முகாமை சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார்.

சென்னை,

கொரோனா தொற்று பரவிய தொடக்க காலக்கட்டத்தில் இருந்து தமிழகம் முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தீயணைப்பு படை வீரர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியை செய்து வருகின்றனர். இதில் சென்னையில் மட்டும் 166 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து மீண்டும் பணியை செய்து வருகின்றனர். குணம் அடைந்தவர்களில் 29 பேர் தாமாக முன்வந்து பிளாஸ்மா தானமும் செய்துள்ளனர்.

இந்த நிலையில், தீயணைப்புத்துறை அதிகாரிகள் முதல் தீயணைப்பு படை வீரர்கள் வரை அனைவருக்கும் குடும்பம் மற்றும் அலுவல் சார்ந்த பிரச்சினைகளால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க மனநல டாக்டர்களை கொண்டு ஆலோசனை முகாம் சென்னை எழும்பூரில் உள்ள தீயணைப்புத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த மனநல ஆலோசனை முகாமை தமிழ்நாடு தீயணைப்புத் துறை இயக்குனர் சி.சைலேந்திர பாபு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

‘கிரியேஷன் சாரிட்டபிள் டிரஸ்டை’ சேர்ந்த மனநல டாக்டர் பிருத்வி மற்றும் டாக்டர் ஆஷா மெரினா ஆகியோர் மனநல பயிற்சி முகாமை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறை வடக்கு மண்டல இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மனநல பயிற்சி மிகவும் அவசியம்

பயிற்சி முகாமில் சி.சைலேந்திரபாபு பேசியதாவது:-

தீயணைப்பு துறை சார்பில் ஆண்டுக்கு 25 ஆயிரம் தீயணைப்பு பணிகளும், 26 ஆயிரம் மீட்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. இப்போது பருவ மழைக்காலம் தொடங்க உள்ளது. இதனால் பல்வேறு விதமான இடர்பாடுகள் வரலாம். நிலச்சரிவு ஏற்படலாம். வெள்ளப்பெருக்கு ஏற்படலாம். இதற்காக உடல் ரீதியான பயிற்சி மற்றும் மீட்பு பயிற்சி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில் மனநல பயிற்சியும் மிகவும் அவசியமாகிறது. இந்த பயிற்சி முடிந்த பிறகு தொடர்ந்து ஆன்லைன் மூலமாகவும் பயிற்சி வழங்கப்படும். தீயணைப்பு வீரர்கள் உடல் தகுதி உள்ளவர்களாக இருப்பார்கள். மேலும், பட்டப்படிப்பு படித்தவர்களும், பொறியியல் படிப்பு படித்தவர்களும் தான் அதிக அளவில் பணியில் சேர்கிறார்கள். எனவே, நல்ல வலிமையான மனநிலை உள்ளவர்களாக இருப்பார்கள். இருந்தாலும், இந்த மனநல பயிற்சி மிகுந்த மன வலிமையை கொடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published.