பல்லாவரம் பகுதியில் வழிப்பறி செய்துவிட்டு கத்தியுடன் சுற்றி திரிந்த 2 சிறுவர்கள் உட்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 14 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை பல்லாவரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 4 பேரை போலீஸார் பிடித்து விசாரித்தபோது அவர்களிடம் ஒரே இரவில் வழிப்பறி செய்த 14 செல்போன்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
பிடிபட்டவர்களில் 2 பேர் இளம் சிறார்கள் என்பது அதிர்ச்சியான உண்மை. இது பல்லாவரத்தில் மட்டுமல்ல சென்னையில் பெரும்பாலான இடங்களில் நடக்கும் நிகழ்வாக உள்ளது.
பல்லாவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் நேற்று (11.02.2018) இரவு பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலை, ஒலிம்பியா பில்டிங் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நான்கு பேர் ஒரே வாகனத்தில் வந்தனர், அதில் இரண்டு பேர் சிறுவர்கள். மெக்கானிக் வேலை பார்ப்பதாக அப்பாவியாக கூறியதைப் பார்த்த போலீஸார் சரி வாகனத்தின் ஆவணங்களை எடுங்கள் என்று கூறியபோது அவர்கள் திருதிருவென விழித்தனர்.
சந்தேகமடைந்த போலீஸார் சோதனை செய்தபோது அவர்களிடம் ஒன்றரை அடி நீள கத்தி ஒன்றும் 14 செல்போன்களும் இருந்தன.
உடனடியாக அந்த நான்கு நபர்களையும் பிடித்து பல்லாவரம் காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில் பிடிப்பட்ட நபர்கள் விருகம்பாக்கம் மீனாட்சியம்மன் நகரைச்சேர்ந்த 1. ஹரீஷ்(19), கோவூரைச் சேர்ந்த 2. ஆகாஷ்(20), மற்ற இருவர்கள் சிறுவர்கள் என தெரியவந்தது.
மேலும் போலீஸாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட நான்கு நபர்களும் சேர்ந்து பல்லாவரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
சுற்றி சுற்றி கத்தியைக்காட்டி மிரட்டி அப்பகுதியில் உள்ளவர்களிடம் ஒரே இரவில் 14 செல்போன்களை பறித்துள்ளனர். கைதானவர்களிடமிருந்து 1.5 அடி நீளமுள்ள கத்தி, 14 செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர் படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி ஹரிஷ், ஆகாஷ் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற 2 சிறுவர்கள் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.