காஷ்மீரில் மத்திய ரிசர்வ் படை முகாமை தகர்க்க, தீவிரவாதிகள் இன்று (திங்கள்) நடத்திய தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடந்து வருகிறது.
காஷ்மீர் மாநிலம் சுஞ்சுவான் பகுதியில் உள்ள ராணுவ முகாமிற்குள் ஆயுதங்களுடன் நுழைந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள், அங்கிருந்த ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 2 அதிகாரிகள் பலியாயினர். 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து நீடித்த துப்பாக்கிச் சண்டையில் மேலும் 3 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு வீரரின் தந்தை ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஸ்ரீநகரில் உள்ள மத்திய ரிசர்வ் படை போலீஸ் முகாமில் இன்று (திங்கள்கிழமை) தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்த முயன்ற சதி முறியடிக்கப்ப்டடுள்ளது. முகாமின் தகவல் தொடர்பு கோபரத்தில் அதிகாலை 4 மணியளவில் இரண்டு தீவிரவாதிகள் ஏகே 47 துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்த தொடங்கினர். உடனடியாக வீரர்கள் பதிலடி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து ஓடினர். அவர்களை தொடர்ந்து விரட்டிச் சென்று தாக்குதல் நடத்தினர்.
முகாம் அருகில் உள்ள கட்டுமானப் பணிகள் நடந்து வரும் கட்டிடத்திற்குள் தீவிரவாதிகள் புகுந்தனர். இதையடுத்து அந்த கட்டிடத்தை வீரர்கள் சுற்றி வளைத்தனர். வர்தத்க பகுதியான அங்கு அருகில் உள்ள கட்டிடத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டடு அந்தப் பகுதி முழுமையாக வீரர்கள் வசம் கொண்டு வரப்பட்டுள்ளது. உள்ளே பதுங்கியுள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடந்து வருகிறது.
எனினும், முகாமில் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் அவர்கள் வந்ததது தெரிய வந்துள்ளது. சரியான நேரத்தில் வீரர்கள் அவர்களை கண்டு பிடித்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.