Police Department News

திருவான்மியூரில் பெண் ராணுவ அதிகாரியிடம் செல்போன் பறிப்பு: போக்குவரத்து நெரிசலால் சிக்கிய இளைஞர்கள் கைது

திருவான்மியூரில் பெண் ராணுவ அதிகாரியிடம் செல்போனை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பறந்த இளைஞர்கள் போக்குவரத்து நெரிசலால் போலீஸாரிடம் சிக்கினர்.

சென்னை ராணுவ தலைமையகத்தில் கேப்டனாக இருப்பவர் சிம்ரன் பேடி சேத்துப்பட்டில் வசிக்கிறார். இவர் நேற்று மாலை திருவான்மியூர் கலாசேத்ரா சாலையில் தனது நண்பரை பார்க்க வந்துள்ளார். பின்னர் வீடுதிரும்ப அவர் வெளியே சாலைக்கு வந்தபோது, அவரிடமிருந்த செல்போனை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் பறித்து சென்றனர்.

அப்போது இதைப்பார்த்த பொதுமக்கள் அந்த இளைஞர்களை துரத்தினர். ஆனால் அவர்கள் பொதுமக்களிடம் சிக்காமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றனர். போலீஸாருக்கு சிலர் தகவல் அளித்தனர். போலீஸாரும் அவர்களை விரட்டினர். இந்நிலையில் திருவான்மியூர் அருகே போக்குவரத்து நெரிசலில் இளைஞர்கள் சிக்கிக்கொண்டனர். உடனடியாக ரோந்து போலீஸார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

பிடிபட்ட இளைஞர்களை சோதித்தபோது அவர்களிடம் ஓரடி நீள கத்தியும் பெண் ராணுவ அதிகாரியிடம் பறித்து வந்த செல்போனும் இருந்தது. உடனடியாக போலீஸார் அவர்களை கைது செய்து அவர்கள் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் பெயர் சதீஷ் மற்றும் அகமது என தெரிய வந்தது. பிடிபட்ட சதீஷ் மீது கொலை, வழிப்பறி வழக்குகளும், அகமது மீது செயின் பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகளும் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.

Leave a Reply

Your email address will not be published.