Police Department News

பெரியார் சிலை தொடர்பான சர்ச்சை கருத்து: கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு- தபெதிகவை சேர்ந்த 3 பேர் கைது

கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசியதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து கோவை மாநகர போலீஸார் விசாரிக்கின்றனர்.

திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்திலும் பெரியார் சிலைகளும் அகற்றப்படும் என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவின் பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியானது. இதையடுத்து கோவையில் 6 இடங்களில் உள்ள பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிகாலையில் தாக்குதல்

இந்நிலையில், நேற்று அதிகாலை 3.50 மணியளவில் கோவை காந்திபுரம் அடுத்துள்ள நியூசித்தாபுதூர், விகேகே மேனன் சாலையில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்றனர். இருசக்கர வாகனத் தில் வந்த சில நபர்கள் 2 பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். பாஜக அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தில் உள்ள கடையின் பெயர்ப் பலகையில் பட்டு கீழே விழுந்து பாட்டில்கள் வெடித்தன. அங்கு பாதுகாப்பில் இருந்த காவலர் ஒருவர் மர்ம நபர்களைப் பிடிக்க முயன்றார். அதற்குள் அவர்கள் தப்பிவிட்டனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சேதம் ஏதும் ஏற்படாவிட்டாலும், அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து விசாரிக்கவும், சம்பந்தப்பட்டவர்களை பிடிக்கவும் மாநகர குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் பூ.பெருமாள் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பாஜக அலுவலகம் முன்பிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் பதிவான நபர்களின் உருவ ஒற்றுமை அடிப்படையில் விசாரித்த போலீஸார், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 3 நபர்களை பிடித்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் விசாரித்ததில், தபெதிக மாநகர அமைப்பாளரான நீலிக்கோணாம்பாளையத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் (30) என்பவர் சின்னத்தடாகத்தில் பிடிபட்டார். கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த கோபால் (எ) பாலன் (37) போலீஸில் சரணடைந்தார். நீலிக்கோணாம்பாளையத்தைச் சேர்ந்த கவுதம் (எ) கவுட்டயன் (28) என்பவரும் கைதானார். இதில், 4-வதாக ஒருநபர் ஈடுபட்டுள்ளதாக சந்தேகம் நிலவுகிறது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 427 (சொத்துக்களை சேதப்படுத்துதல்), 285 (தீ வைத்து மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்துதல்), மற்றும் 153 (ஏ) (இரு சமூகத்தினரிடையே பகைமையை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியாருக்கு எதிரான கருத்துகளை எச்.ராஜா வெளியிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே இச்சம்பவம் நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்றனர்.

இதனிடையே பெட்ரோல் குண்டு வீசுவதற்காக பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தில் ‘பிரஸ்’ என்று எழுதப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்து துணை ஆணையர் பெருமாள் கூறும்போது, ‘சம்பவத்துக்காக ஒர்க் ஷாப்பில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை எடுத்து வந்துள்ளனர்.வேறு யாரேனும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published.