முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதி ரவிச்சந்திரன் 15 நாள் (பரோல்) விடுமுறையில் அருப்புக்கோட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு வந்தார். அவருக்கு டிஎஸ்பி தலைமையில் 155 போலீஸார் பாதுகாப்பு அளிக்கின்றனர்.
அருப்புக்கோட்டை மீனாம்பிகை நகரைச் சேர்ந்த பொய்யாழி – சந்திரா தம்பதியின் மூத்த மகன் ரவிச்சந்திரன்(48). முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர், சொத்து பிரிவினைக்காக பரோல் (விடுமுறை) கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை நீதிபதிகள் எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி அமர்வு கடந்த 1-ம் தேதி விசாரித்து மார்ச் 5 முதல் 19-ம் தேதி வரை விடுமுறை வழங்கினர்.
மேலும் விடுமுறை நாளில் தனது வழக்கறிஞரை சந்தித்துப் பேசவும், சொத்துகளைப் பார்வையிடவும், பதிவுத் துறை அலுவலகம் செல்லவும், மதுரை மீனாட்சிம்மன் கோயில் செல்லவும் ரவிச்சந்திரனுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரவிச்சந்திரன் நேற்று காலை அருப்புக்கோட்டைக்கு அழைத்து வரப்பட்டார். வீட்டில், அவரது சித்தி ராஜேஸ்வரி(64), தம்பி சரவணன்(44) ஆகியோரை ரவிச்சந்திரன் சந்தித்துப் பேசினார். தாய், தந்தை இறந்ததால் சித்தி ராஜேஸ்வரி பராமரிப்பில் ரவிச்சந்திரன் வளர்ந்தார்.
ரவிச்சந்திரன் இதற்கு முன்பு, தனது தந்தை இறந்ததற்குப் பின்னர் முதல் முறையாகவும், பின்னர் சொத்து பிரிவினை சம்பந்தமாக 26.11.2012 முதல் 10.12.2012 வரை 2-வது முறையாகவும் பரோலில் வந்து சென்றார். தற்போது 3-வது முறையாக பரோலில் வந்துள்ளார்.
வீட்டுக்கு வந்த ரவிச்சந்திரனிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள், நீதிமன்றத்தின் விதிமுறைகள் குறித்து ஏடிஎஸ்பி மதி விளக்கினார். ரவிச்சந்திரனின் வீட்டிலும், அதைச் சுற்றியும் டிஎஸ்பி தனபால் தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள், 11 எஸ்ஐகள், 140 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஆங்காங்கே கண்காணிப்புக் கேமராக்களும் பொறுத்தப்பட்டுள்ளன. ரவிச்சந்திரன் வீட்டுக்குள் செல்பவர்கள் அனைவரையும், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்திய பின்னரே அனுமதித்தனர்.