
தூத்துக்குடி 2019 அக்டோபர் 31 ;தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இவ்வாண்டு 02.11.2019 அன்று நடைபெறும் கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, பக்தர்களின் பாதுகாப்பையும், வசதியையும் முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், தலைமையில் சுமார் 3500 காவல்துறையினரை வைத்து கீழ்கண்ட விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது….இந்த ஆண்டு பக்தர்களின் வசதிக்காக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை முதன் முறையாக பொது மக்கள், தாங்கள் செல்லும் வழி, வாகன நிறுத்தம் போன்றவற்றை தெரிந்து கொள்ள “கூகுள் மேப்ஸ் “யு.ஆர்.எல்” (“Url” Link) bit.ly/2PAk7pU லிங்கை பொதுமக்கள் தங்களுடைய ஸ்மார்ட் போனில் பயன்படுத்தி, தங்களுடைய வழிப்பாதையை தெரிந்து கொண்டு முறையே அனுமதித்துள்ள வாகன நிறுத்தத்தை பயன்படுத்துமாறு கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் 01.11.2019ம் தேதி மாலை 4 மணி முதல் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அந்தந்த பகுதிகளில் உள்ள வாகன நிறுத்தங்களில், நிறுத்தம் செய்ய வேண்டும்.
இதர வாகனங்கள் செல்வதற்கு 02.11.2019ம் தேதி காலை முதல் கீழ் கண்ட வழிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதர வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை கன்னியாகுமரி, சாத்தான்குளம் மார்க்கத்தில் இருந்து தூத்துக்குடிக்கு செல்வதாக இருந்தாலும், தூத்துக்குடி, திருநெல்வேலி மார்க்கத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக, சாத்தான்குளம் வழியாக கன்னியாகுமரி, செல்வதாக இருந்தால் ஆலந்தலை அல்லது குலசேகரப்பட்டிணம், உடன்குடி, பரமன்குறிச்சி, காயாமொழி, காந்திபுரம், நல்லூர் விலக்கு, DCW வழித்தடத்தின் வழியாக செல்ல வேண்டும்.
1) சூரசம்ஹார திருவிழாவிற்கு தூத்துக்குடி மார்க்கமாக வரும் தனியார் சிறுரகவாகனங்கள் வீரபாண்டியன்பட்டிணம் அருகில் உள்ள ஜே.ஜே. நகர் தற்காலிக வாகன நிறுத்துமிடத்தில் சுமார் 2500 வாகனங்கள் நிறுத்தக்கூடிய வகையிலும், சுமார் 1000 கனரக வாகனங்கள் அரசு தொழிற்பயிற்சிபள்ளி (ITI) மற்றும் சண்முகபுரம் இசக்கியம்மன் கோவில் வளாகத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜே.ஜே. நகர் வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு அங்கிருந்து பக்தர்கள் நேரடியாக கோவில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாலத்தின் வழியாக T.B.ரோடு வந்து, தாலுகா காவல் நிலையம் முன்புறமாக வந்து கோவில் செல்லபாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வயதானவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் வசதிக்கேற்ப 30 சிறு பேரூந்து வசதி மூலம் பொதுமக்கள் வாகன நிறுத்துமிடத்திலிருந்து இரும்பு ஆர்ச் வரை ஏற்றிச் செல்ல வழித்தடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2) திருநெல்வெலி மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்கள் திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள குமாரபுரம் இசக்கியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள தற்காலிக வாகன நிறுத்துமிடத்தில் சுமார் 2000 வாகனங்கள், கோவிந்தம்மாள் மகளிர் கல்லூரி எதிர்புரம் சுமார் 1000 வாகனங்கள், வியாபாரிகள் சங்க காலிமனை, அன்புநகர், கோவிந்தம்மாள் கல்லூரி குடியிருப்பு அருகில் சுமார் 2000 வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
3) வள்ளியூர், சாத்தான்குளம் மார்க்கத்தில் இருந்துவரும் தனியார் வாகனங்கள் பரமன்குறிச்சி சாலையில் FCI (இந்தியஉணவுக் கழகம்), பால் அய்யர் பார்க் அருகில் அமைந்துள்ள தற்காலிக வாகனம் நிறுத்துமிடத்தில் சுமார் 1500 வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
4) கன்னியாகுமரி, உவரி மார்க்கத்தில் இருந்துவரும் தனியார் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறமுள்ள தோப்பூர் பார்க்கிங் மற்றும் வேலவன ;நகர் தற்காலிக வாகன நிறுத்துமிடத்தில் சுமார் 700 வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
5) திருவிழாவிற்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் தாங்கள் வரும் வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூராக சாலை ஒரங்களில் ஆங்காங்கே நிறுத்திவிட்டு செல்லாமல் அதற்கென உரியவாகன நிறுத்துமிடங்களில் நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதைமீறி போக்குவரத்திற்கு இடையூராக நிறுத்தப்படும் வாகனங்களை நேரடியாகவும், CCTVகேமிரா மூலமாகவும், கண்காணித்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
6) தூத்துக்குடி மார்க்கத்தில் இருந்துவரும் அரசு பேரூந்துகள் பகத் சிங் நிரந்நதர பேரூந்து நிறுத்த்திலும், திருநெல்வேலி மார்க்கத்தில் இருந்து வரும் அரசு பேரூந்துகள் திருநெல்வேலி சாலையில் சுடலைகோவில் முன்பு அமைந்துள்ள தற்காலிக பேரூந்து நிறுத்தத்திலும், கன்னியாகுமரி உவரிமார்க்கத்தில் இருந்துவரும் அரசுபேரூந்துகள் முருகாமடம் சந்திப்பு அருகில் உள்ளதற்காலிக பேரூந்து நிறுத்தத்திலும், சாத்தான்குளம் மார்க்கத்தில் இருந்து வரும் அரசு பேரூந்துகள் முருகாமடம் அருகில் உள்ளதற்காலிக பேரூந்து நிறுத்தத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
7) கோவில் நிர்வாகத்தால் வழங்கப்படும் அனுமதி வாகன அட்டை (Pass) வைத்திருப்பவர்கள் திருச்செந்தூர் மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், மேற்கு ரதவீதி, தெற்கு ரத வீதி, அமலிநகர் சந்திப்பு, நவ்வாப்பழ சாலை வழியாக வாகனங்களை நாழிக்கிணறு மற்றும் அய்யா வழிக் கோவில் அருகில் அமைந்துள்ள வாகன நிறுத்தத்திலும் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளது.
மேற்படி வாகன அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் 02.11.2019ம் தேதி மதியம் 1 மணிக்குள்ளாக வர அறிவுறுத்தப்படுகிறது. 1 மணிக்கு பின்னர் வரக்கூடிய அனுமதி அட்டையுடைய வாகனங்கள் மேற்படி நிறுத்தத்திற்கு வரஅனுமதி மறுக்கப்படுகிறது. அதன் பின்னர் அனுமதி வாகன அட்டையுடன் வரும் வாகனங்கள் தற்காலிக வாகன நிறுத்தங்களில் மட்டுமே நிறுத்த முடியும்.
8) சூரசம் ஹாரம் முடிந்து பக்தர்கள் தங்கள் அனுமதி வாகன அட்டையுடைய வாகனங்கள் வெளியேறும் போது நாழிக்கிணறு பகுதியிலிருந்து அமலிநகர் சந்திப்பு, அல்லது நாழிக்கிணறு பகுதியிலிருந்து அமலி நகர் ஊருக்கு உள்பகுதி வழியாக வரும் புதிய சாலையின் மூலமாக அமலிநகர் சந்திப்பு, தெற்குரத வீதி, முருகாமடம் (தெப்பக்குளம்) வந்து அரசு மருத்துவமனை (GH) பின்புறம் உள்ள பைபாஸ் சாலை வழியாக திருநெல்வேலி பிரதான சாலை வந்து திருநெல்வேலி நோக்கி செல்பவர்கள் நேராக திருநெல்வேலிக்கும், சாத்தான்குளம், கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக செல்பவர்கள் காந்திபுரம், பரமன்குறிச்சி வழியாகவும், தூத்துக்குடி செல்பவர்கள் இராணி மகாராஜபுரம் வழியாக நல்லூர் விலக்கு அல்லது அடைக்கலாபுரம் வழியாக செல்ல வேண்டும்.
9) திருநெல்வேலி தூத்துக்குடி வழியாக வரும் அதி முக்கிய நபர்கள் மெயின் ஆர்ச், டி.பி. ரோடு வழியாக கோவிலின் வடபகுதிக்கு வந்து வாகனம் நிறுத்தம் செய்யவேண்டும்.
10) கோவிலிருந்து T.B.ரோடு வழியாக வெளியேறும் வாகனங்கள் மெயின் ஆர்ச் வந்து நேராக திருநெல்வேலி ரோடு சென்று சாத்தான்குளம் உடன்குடி செல்லும் வாகனங்கள் காந்திபுரம் பரமன்குறிச்சி வழியாகவும், தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் இராணிமகாராஜபுரம், அடைக்கலாபுரம் வழியாக செல்லவேண்டும், திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் நேரடியாக செல்லவேண்டும்.
11) தற்காலிக தனியார் வாகன நிறுத்தங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் அதேதடம் வழியாக திரும்பிச் செல்லவேண்டும்.
12) இருசக்கர வாகனங்கள் நிறுத்த பழைய கோவில் காவல் நிலையம் மற்றும் தாலுகா காவல் நிலையம் அருகே தனியாக இருச்சக்கர வாகன நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
13) எக்காரணம் கொண்டும் ஒரு முறை அனுமதி வாகன அட்டையுடன் உள்ளே நுழைந்த வாகனங்கள் சூரசம்ஹரம் முடியும் வரை வெளியே வரக்கூடாது.
14) வாகன அனுமதி அட்டை தவிர இதர தனியார் வாகனங்கள் 01.11.2019 அன்று மாலை முதல் சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டு அந்ததந்த பகுதிக்கு உரிய தற்காலிக வாகன நிறுத்தங்களில் நிறுத்தப்படும்.
15) திருச்செந்தூர் நகர் முழுவதும் 10 கண்காணிப்பு கோபுரங்கள் 70 CCTV கேமிராக்கள், 10 LED TV க்கள் ஆகியவைகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டு பக்தர்களின் வசதிக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
16) கடற்கரை மணல் பகுதியில் ரோந்து செல்லக்கூடிய இரண்டு ரோந்து வாகனங்கள் (ATV) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் கடலினுள் கடலோர காவல்படை மற்றும் மீன்வளத்துறையினர் மூலம் பைபர் படகுகள் நிறுத்தப்பட்டு கடலில் குளிக்கும் பக்தர்களை கண்காணிக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
17) கடலில் குளிப்பவர்கள் ஒளிரும் விளக்குகளுடன் அமைக்கப்பட்டுள்ள மிதவைகள் போடப்பட்டுள்ள பகுதியை தாண்டிச் சென்று குளிக்க அனுமதி இல்லை. மரத் தடுப்புகளை யாரேனும் ஏறித் தாண்டினாலோ, சேதப்படுத்தினாலோ சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
18) தென் மண்டத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் குற்றப்பிரிவு போலீஸார் வரவழைக்கப்பட்டு குற்றம் மற்றும் திருட்டுச் செய்கையில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
19) ஏற்கனவே திருச்செந்தூர் பகுதியில் பணிபுரிந்த அனுபவமுள்ள காவல் அதிகாரிகள் தனியாக வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு அலுவல் பலபடுத்தப்பட்டுள்ளது.
20) தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாக 24 மணி நேரமும் இயங்கும் காவல் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திருச்செந்தூர் கோவில் புறக் காவல் நிலையத்திலும், கடற்கரையிலும் அமைக்கப்பட்டு பொதுமக்களின் புகார் மற்றும் கோரிக்கைகள் கேட்டறிந்து தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
21) சூரசம்ஹார நிகழ்ச்சியை கடற்கரையில் காணவரும் பக்தர்கள் கம்பால் கட்டப்பட்டுள்ள கோட்டையினுள் கீழே தரையில் அமர்ந்து தான் நிகழ்ச்சிகளை கண்டு தரிசனம் செய்ய வேண்டும். சூரசம்ஹாரம் நடக்கும் போது எழுந்து நிற்பதோ அல்லது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்வதோ கூடாது.
22) வாகனங்களில் வரும் பக்தர்கள் போக்குவரத்தை சீர் செய்யும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து, அந்தந்த வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தம் செய்தும், அவர்கள் காட்டும் வழிமுறைகளை கடைபிடித்தும், மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்கு பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், கேட்டுக்கொண்டுள்ளார்.
போலீஸ் இ நியூஸ்
திருவள்ளூர் மாவட்ட முதன்மை செய்தியாளர்
M.குமரன்