நீலகிரி: ‘3000 குட்கா பாக்கெட்டுகள்… 417 மது பாட்டில்கள்! காய்கறி வாகனத்தில் நடக்கும் கடத்தல்.’
கர்நாடக மாநிலத்தில் இருந்து நீலகிரிக்கு காய்கறி வாகனங்கள் மூலம் இன்று ஒரே நாளில் பதுக்கி கொண்டுவரப்பட்ட 3 ஆயிரம் குட்கா பாக்கெட்டுகள்,417 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து,4 நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த 10ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. சட்டவிரோதமான மது விற்பனை மற்றும் கள்ளச்சாராயம் புழக்கத்தை கண்டறிய மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.நீலகிரியைப் பொறுத்தவரை கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து மது வகைகளை தமிழகத்திற்குள் கொண்டு வரப்படுவதைத் தடுக்கும் வகையில், எல்லையோர சோதனைச் சாவடிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்களை மட்டுமே இரு மாநிலங்களுக்கு இடையே அனுமதித்து வருகின்றனர். இந்த நிலையில்,இன்று காலை கர்நாடகாவில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டியை நோக்கி தக்காளி ஏற்றிக் கொண்டு இரண்டு வாகனங்கள் வந்தன.அந்த வாகனங்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.இதில், தக்காளி கூடைகளுக்கு அடியில் மது பாட்டில்களை வைத்து, மேலே தக்காளிகளை நிரப்பி கொண்டு வந்திருப்பதை கண்டறிந்தனர்.மது பாட்டில்கள் மற்றும் இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து,இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர்.இரண்டு பிக்கப் வண்டிகள் அடுத்தடுத்து வந்தன. அதிலிருந்த தக்காளி பெட்டிகளை சோதனை செய்தனர் அனைத்து பெட்டிகளிலும் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஒரு பிக்கப் வண்டியில் 165 மதுபாட்டில்களும், இன்னொரு பிக்கப் வண்டியில் 206 மதுபாட்டில்கள் என 371 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர் கர்நாடகாவில் இருந்து நீலகிரிக்கு மதுபாட்டில்கள் கடத்திய தேவர்சோலை பகுதியைச் சேர்ந்த சஞ்சின்தேவ்(29), ஊட்டி பார்சன்ஸ்வேலி பகுதியைச் சேர்ந்த நாராயணன் (27) இரண்டு பேரைக் கைது செய்து வாகனத்தையும், மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.இதே போல் கர்நாடக மாநிலம் குண்டல்பேட் பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதிக்கு காய்கறி ஏற்றி வந்த வாகனத்தை தேவாலா நீர்மட்டம் பகுதியில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில், 3,000 குட்கா பாக்கெட்கள் மற்றும் 46 மது பாட்டிகல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக கூவமூலா பகுதியைச் சேந்த முகமது (32) ,சலீம் (32) ஆகிய இருவரைக் கைது செய்து,விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.