மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓராண்டிற்குள் இடமாற்றம்
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் அவர்கள் பொறுப்பேற்று ஓராண்டு முடிவதற்குள் இடமாற்றம் செய்யப்பட்டார். இவரிடத்தில் அரியலூர் காவல் கண்காணிப்பாளர் வி. பாஸ்கரன் வயது 44, அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேனி எஸ்பி யாக இருந்தவர்.
சுஜித்குமார் கடந்தாண்டு ஜூலை மாதம் 12 ம் தேதி மதுரை எஸ்பி யாக பொறுப்பேற்றார். பீகாரை சேர்ந்த இவர் எவ்வித சர்ச்சையிலும் சிக்காமல் பணியாற்றினார். சிறு அசம்பாவிதம் நடந்தாலும் சம்பவ இடத்திற்கு செல்பவர். இவரது பணிகாலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை பெரிய அளவில் இல்லை. குற்றங்களும் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டன. இவர் சில மாதங்களாகவே இட மாறுதலுக்கு முயற்ச்சித்து வந்தார், இவருக்கு மாற்றுப் பணியிடம் ஒதுக்கப்படவில்லை,
புதிய எஸ்பி யாக நியமிக்கப்பட்டுள்ள பாஸ்கரன் அவர்கள் கோவில்பட்டியை சேர்ந்தவர். குரூப் 1 தேர்வு மூலம் போலீஸ் பணியில் சேர்ந்தார். 2018 ல் தேனி எஸ்பி யாக நியமிக்கப்பட்டார். பணியில் ஒழுங்கீனமாக நடந்ததாக கூறி இரு ஆயுதப்படை போலீசாரை ராமநாதபுரத்திற்கு இடமாற்றம் செய்தார். இதை எதிர்த்து அவர்கள் டி.ஜி.பி. , அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. சில மாதங்களில் அவர் சென்னை பூந்தமல்லி பட்டாலியன் படைக்கு மாற்றப்பட்டார்.
மதுரை நகரில் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சிவப்பிரசாத் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பதில் ஈரோடு எஸ்பி தங்கத்துரை நியமிக்கப்பட்டுள்ளார்.
நகர் தவைமையிடத்து துணை ஆணையர் பாஸ்கரனுக்கு பதில் கோவை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஸ்டாலின் அவர்களும், போக்குவரத்து துணை ஆணையர் சுகுமாரணுக்கு அவர்களுக்கு பதில் சென்னை உதவி ஐ.ஜி.,ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். துணை ஆணையர் இருவருக்கும் மாற்றுப்பணியிடம் இன்னும் ஒதுக்கப்படவில்லை.