
நான்கு மாதமாக சம்பளம் தர வில்லை, ஊர்காவல் படையினர் தவிப்பு
கொரோனா நோய் தொற்று அதிகமாக இருந்த காலங்களிலும் பணிபுரிந்த ஊர்காவல் படையினர், நான்கு மாதங்களாக சம்பளம் கிடைக்காததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இரவு நேர ரோந்துப் பணி, போக்குவரத்து சீர் செய்தல், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணி, மற்றும் அதிகாரிகளுக்கு கார் ஓட்டுனர்களாக மாநிலம் முழுவதும் 18 ஆயிரம் பேர் ஊர்காவல் படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தினமும் 560 ரூபாய் சம்பளம் தரப்படுகிறது.
இவர்களுக்கு எத்தனை நாட்கள் பணி ஒதுக்கப்படுகிறதோ, அந்த நாட்களுக்கான சம்பளம் அதிகப்பட்சம் 3 மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும்.
மே மாதம் கொரோனா பரவல் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வந்த நிலையிலும் ஊர்காவல் படையினருக்கு 15 நாட்களுக்கு தொடர்ந்து பணிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் அவர்களுக்கான சம்பளம் மட்டும் குறித்த நேரத்தில் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து ஊர்காவல் படையினர் கூறுவதாவது, எங்களுக்கு வேலை நாட்கள் மிகவும் குறைவு சம்பளமும் குறைவு, போலீஸ் அதிகாரிகள் எங்களை கருவேப்பில்லை போன்று பயன்படுத்தி கொள்ளுகின்றனர். அவசரத் தேவைக்கு மட்டும் எங்களை தேடும் போலீசார் சம்பளம் கேட்டால் ஏன் அவசரப்படுகிறீர்கள் என்கின்றனர். நான்கு மாதங்களாக சம்பளம் தரப்பட வில்லை இதனால் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். எங்களுக்கு மாதம் தோறும் பணி ஒதுக்கி சம்பளம் தர வேண்டும். இதற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களும், டி.ஜி.பி., சைலேந்திரபாபு உள்ளிட்ட காவல் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள்.
