இன்ஸ்பெக்டர் இடமாற்றம்; கலங்கிய பெண்கள்! – மக்கள் மனதில் இடம்பிடித்த ஆய்வாளர் சிதம்பரமுருகேசன் அவர்களின் சீக்ரெட்
காவல்நிலையங்களால் அலைக்கழிக்கப்படும் எளிய மனிதர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த இன்ஸ்பெக்டர் சரியில்லை, உடனே இடமாற்றம் செய்யுங்கள்' எனப் போராடிய மக்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால்,
காசிமேடு இன்ஸ்பெக்டர் சிதம்பரமுருகேசனை இடமாற்றம் செய்யக்கூடாது’ என அப்பகுதி பெண்கள் திரண்டு சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
`அப்படி என்னதான் சாதித்தார் சிதம்பர முருகேசன்?’ என சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் கேட்டோம். “இரவு நேரங்களில் நாங்கள் நிம்மதியாக தெருவில் நடமாடுவதற்கே அவர்தான் காரணம். இனிமேல் இப்படியொரு காவல் அதிகாரி இங்கு கிடைப்பாரா?” என ஆதங்கப்பட்டனர்.
சென்னையைப் பொறுத்தவரை வடசென்னையில்தான் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும். இதனால் வடசென்னை காவல் நிலையங்களில் பணி என்றாலே போலீஸாருக்கு மனஅழுத்தம் கூடிவிடும். அதிலும், வடசென்னை பகுதிக்குட்பட்ட காசிமேடு காவல் நிலையத்தில் மாதத்தில் ஒரு கொலை, இரண்டு கொலை முயற்சி வழக்குகள், அடிதடி வழக்குகள் எனக் குற்ற எண்ணிக்கை கூடிக் கொண்டே போகும். அப்படிப்பட்ட காவல் நிலையத்தில் பணியாற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறார் சிதம்பரமுருகேசன்.
சென்னையில் பணிபுரிந்து வந்த 22 இன்ஸ்பெக்டர்களைக் கடந்த 8.11.2019-ல் இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன். அதில் காசிமேடு இன்ஸ்பெக்டர் சிதம்பரமுருகேசனும் ஒருவர். இவர், அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட காசிமேடு பகுதி மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஆய்வாளரின் இடமாறுதல் உத்தரவைக் கண்டித்து சூரியநாராயண சாலையில் திரண்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன், சம்பவ இடத்துக்கு வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும் மறியலில் ஈடுபட்ட பெண்கள், சார், நீங்கள் இங்கிருந்து செல்லக்கூடாது' என்று கண்ணீர்மல்க கூறினர். அவர்களின் அன்பை எதிர்பார்க்காத இன்ஸ்பெக்டர்,
நான் என்றும் உங்களோடுதான் இருப்பேன். என் மீதான அன்பு காரணமாக மறியல் செய்கின்றனர். இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சாலைமறியலைக் கைவிடுங்கள்’ என எடுத்துக் கூறினார். அவரது பேச்சுக்குக் கட்டுப்பட்டு, மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
காசிமேடு காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் மீனவ சமூக மக்களே அதிகளவில் குடியிருக்கின்றனர். இரவில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் காலையில் மதுஅருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். மது அருந்தியபிறகு ஏற்படும் தகராறில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகள், குடும்பப் பிரச்னை எனக் காசிமேடு காவல் நிலையத்தில் புகார்கள் அணிவகுப்பது வாடிக்கையானது.
இதுதொடர்பாக, களஆய்வையும் நடத்தியிருக்கிறார். அதில், காலையில் குடிப்பதால் மீனவர்கள் 45 வயது முதல் 50 வயதுக்குள் இறப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனால் குடிக்கு அடிமையான மீனவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் வரவழைத்த சிதம்பர முருகேசன், `காலையில் குடிக்காதீங்க..’ என்பதை வலியுறுத்தியதோடு, அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் விவரித்தார். இந்த அணுகுமுறைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
மேலும், `திமிரு பிடிச்சவன்’ படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்த கதாநாயகன் விஜய் ஆண்டனி தன்னுடைய செல்போன் நம்பரை ஆங்காங்கே எழுதி வைத்திருப்பார். அதுபோல, காசிமேடு காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியிலும் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசனும் தன்னுடைய செல்போன் நம்பரை எழுதி ஆங்காங்கே வைத்தார். தினமும் குறைந்தபட்சம் 50 அலைபேசி அழைப்புகள் வந்தன. அதன்பேரில் இன்ஸ்பெக்டரும் உடனடி நடவடிக்கையை எடுத்தார். இதுபோன்ற செயல்களால் காசிமேடு பகுதி மக்களின் மனதில் இடம்பிடித்தார் சிதம்பர முருகேசன்.
இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசனிடம் பேசினோம். “என்னுடைய சொந்த ஊர் சிவகங்கை. கடந்த 1997-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணிக்குச் சேர்ந்தேன். இளையான்குடியில் சப்-இன்ஸ்பெக்டராக பணிக்குச் சேர்ந்த நான், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் பணியாற்றியுள்ளேன். அதன்பிறகு சென்னைக்கு கடந்த 2014-ம் ஆண்டு இடமாறுதலில் வந்தேன். சென்னை வேப்பேரி, திருவொற்றியூர் ஆகிய காவல் நிலையங்களில் பணியாற்றியுள்ளேன். கடந்த 22.2.2019-ல் காசிமேடு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டேன். காசிமேடு பகுதி குறித்த முழு தகவல்களையும் சேகரித்ததோடு மக்களின் பிரச்னைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தேன்.
காசிமேடு பகுதியில் மது, கஞ்சா, மாவா போன்ற போதை வஸ்துகள்தான் குற்றச் செயல்களுக்கான தொடக்கப்புள்ளியாக இருந்தது. குதிரை சிலை அருகே பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்களும் பெண்களும் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக டாஸ்மாக் மேலாளர் மூலம் அந்தக்கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தேன். அடுத்து கஞ்சா, மாவா விற்பனையையும் முழுமையாக தடுத்தேன். தினமும் காலை, மாலையில் நடந்தே ரோந்து பணிக்குச் செல்வேன். அப்போது மக்களை நேரிடையாக சந்திக்க முடிந்தது.
எனக்கும் காசிமேடு காவல் நிலையத்தைவிட்டு இடம் மாறிச் செல்வது வருத்தமாகத்தான் உள்ளது. சிங்காரவேலன் பகுதி மக்களுக்கு அரசு மூலம் வீடு கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்ய திட்டமிட்டிருந்தேன். ஆனால் அந்தப்பணி மட்டும் நிறைவேறவில்லை. காசிமேடு காவல் நிலையத்தில் நான் இந்தளவுக்கு பணியாற்றுவதற்கு உயர் அதிகாரிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என அனைவரும்தான் காரணம். இந்தச் சேவை அம்பத்தூரிலும் தொடரும்” என்கின்றார் நெகிழ்ச்சியோடு.
போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்