
தமிழகத்தில் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீடிப்பு: எதற்கெல்லாம் அனுமதி?
தமிழகத்தில் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீடிப்பு: எதற்கெல்லாம் அனுமதி?
இந்தியாவையே ஆட்டிப்படைத்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. இரண்டாவது அலையின் சீற்றம் மே மாதம் உச்சத்தில் இருந்தது.
மே மாதம் மூன்றாவது வாரத்தில் மக்களிடையே பீதியைக் கிளப்பும் வகையில் தொற்றின் அளவு அதிகரித்தது. 36,000-ஐத் தாண்டிச் சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு, ஊரடங்கு மற்றும் பல வித தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.
கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் மிக அதிக அளவிலான உயிர் இழப்புகளை ஏற்படுத்தியது. தமிழகத்திலும் தொற்று எண்ணிக்கையும், உயிர் சேதமும் பீதியை உண்டு பண்ணியது. இதையடுத்து கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகள் பிறப்பிக்கப்பட்டன.
பல வித கொரோனா (Coronavirus) எதிர்ப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி செயல்முறை ஆகியவற்றின் காரணமாக தொற்றின் வேகம் குறையத் தொடங்கியது. இதை அடுத்து, அடுத்தடுத்த கட்ட ஊரடங்குகளிலும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில், தற்போது, அடுத்த 2 வாரங்களுக்கு புதிய சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கட்ட ஊரடங்கில், பள்ளிகள் திறக்கபடுவதும், திரையரங்குகள் திறக்கப்படுவதும் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகின்றன.
தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் நீட்டிப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
செப்டம்பர் 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு.
செப்டம்பர் 1 முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் (TN Schools) செயல்பட அனுமதி
அனைத்துக் கல்லூரிகளும் சுழற்சி முறையில் செயல்படவும் அனுமதி
50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதி
ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கு பொது போக்குவரத்துக்கு அனுமதி
கடற்கரையில் பொது மக்கள் அனுமதி
இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்ட கடைகள் ஆகஸ்ட் 23 முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி
மழலைக் காப்பகம் செயல்பட அனுமதி
உயிரியியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் செயல்பட அனுமதி
தங்கும் விடுதி, கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடம் செயல்பட அனுமதி
படகு இல்லங்கள் செயல்பட அனுமதி.
தகவல் தொழிநுட்பம், அதனை சார்ந்த சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
அங்கன்வாடி மையங்கள் 1 ஆம் தேதி முதல் மதிய உணவு வழங்குவதற்கு அனுமதிக்கப்படும்.
விளையாட்டு பயிற்சிகளுக்காக நீச்சல் குளங்கள் 50% பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதி.
