
சமூக ஊடக தளங்கள் இந்திய சட்டங்களை பின்பற்ற வேண்டும் என்றும், இந்திய சட்டங்களை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அவர், “ பேச்சு சுதந்திரம் உள்ளது, ஆனால் 19 ஏ பிரிவு இது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்று கூறுகிறது. டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்கள் வணிகத்தை மேற்கொள்ளும் போது இந்திய விதிகளுக்கு இணங்க வேண்டும். நாங்கள் சமூக ஊடகங்களை மிகவும் மதிக்கிறோம். இவை பொதுவான மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் சமூக ஊடகங்களுக்கு பெரிய பங்கு உண்டு. இருப்பினும், போலி செய்திகளையும் வன்முறையையும் பரப்புவதற்கு சமூக ஊடகங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால், டுவிட்டர் அல்லது வேறு சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து சமூக ஊடக தளங்களும் இந்திய அரசியலமைப்பை கடைபிடிக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பு அரசாங்கத்தையும் பிரதமரையும் விமர்சிக்க அனுமதிக்கிறது. ஆனால் போலி செய்திகளை பரப்புவது அனுமதிக்கப்படாது. சமூக ஊடகங்கள் நாட்டில் வர்த்தகம் செய்ய விரும்பினால் இந்திய சட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு அளவுருக்களை அனுமதிக்க முடியாது. டெல்லி செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் நுழைந்தபோது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
இரட்டை நிலைப்பாடு இந்தியாவில் வேலை செய்யாது. சர்ச்சைக்குரிய கருத்துக்கள், குறிப்பாக மோடி விவசாயிகளை தற்கொலை செய்ய தூண்டுகிறார் எனும் ஹேஸ்டேக் போன்றவை தடுக்கப்பட வேண்டும். சமூக ஊடக நிறுவனங்கள் தங்களுக்கென தனியாக ஒழுங்கு கட்டுப்பாடுகளை வகுக்க வேண்டும். அப்போதுதான் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகினால், தடுக்க முடியும்” என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
