நெல்லை நகரில் ஒரு மாதத்தில் 36 போலீசார் விருப்ப ஓய்விற்கு மனு
60 வயது வரை பணியாற்ற அரசு வாய்ப்பளித்தும் நெல்லை மாநகரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் எஸ்.எஸ்.ஐ., உள்பட 36 பேர் விருப்ப ஓய்விற்கு மனு அளித்துள்ளனர்.
மாவட்டத்திலும் விருப்ப ஓய்வு கேட்டு பலர் விண்ணப்பித்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 25 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் என்று பணி வழங்கப்படுகிறது. இது தவிர சார்பு ஆய்வாளர், ஆய்வாளர், டி.எஸ்.பி., என பதவி உயர்வு பெற்றோ அல்லது டி.என்.பி.எஸ்.சி., மூலம் நேரடியாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றோ பணியில் இருந்து வருகின்றனர். தற்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், உள்ளிட்ட அனைத்து அரசு பணியாளர்களுக்கும் ஓய்வு பெறும் வயதை 58 ல் இருந்து 60 ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. ஆனால் போலீசாருக்கு ஓய்வில்லா பணி, மன அழுத்தம், நீரிழிவு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களின் தாக்கம், மற்றும் உயர் அதிகாரிகளின் டார்ச்சர் ஆகிய காரணங்களால் அவர்கள் 60 வயது வரை பணியாற்ற விரும்புவதில்லை. இதனால் தமிழகம் முழுவதும் 58 வயதை கடந்த உடனேயே பல போலீசார் விருப்ப ஓய்வுக்கு வின்னப்பிக்கின்றனர்
நெல்லை மாநகரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சிறப்பு எஸ்.ஐ., உள்பட 36 பேர்கள் விருப்ப ஓய்வுக்கு மனு கொடுத்துள்ளனர். மாவட்டத்திலும் பலர் விருப்ப ஓய்விற்கு மனு அளித்துள்ளனர். இதனால் உயர் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்