சென்னைகாவல்துறைபிரிக்கப்படும் என்கிற தகவல் வெளியான நிலையில், இன்று சட்டப்பேரவையில் முதல்வர் அதை உறுதி செய்தார்.
சென்னை காவல்துறை 3 ஆக பிரிக்கப்படுகிறது. சென்னை காவல் ஆணையரகம் தவிர தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் உருவாக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
. தமிழகத்தில் உள்ள காவல் ஆணையரகத்தில் மிகப்பெரிய ஆணையரகம் சென்னை காவல் ஆணையரகம் தான். சென்னை காவல் துறை ஆணையர் கீழுள்ள அதிகாரிகள் விவரம் டிஜிபி அந்தஸ்து உள்ள அதிகாரிகள் காவல் ஆணையராக பதவி வகிக்கும் மிகப்பெரிய காவல் ஆணையரகமாகும். தற்போது ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள சங்கர் ஜுவால் ஆணையராக உள்ளார். சென்னையில் சட்டம் ஒழுங்குக்கு மட்டும் காவல் ஆணையருக்கு அடுத்து இரண்டு ஐஜி அந்தஸ்து அதிகாரிகள் சட்டம் ஒழுங்குக்காக கூடுதல் ஆணையர்களாக (வடக்கு-மேற்கு) (தெற்கு-கிழக்கு) உள்ளனர். அவர்களுக்கு கீழ் டிஐஜி அந்தஸ்தில் 4 இணை ஆணையர்கள் உள்ளனர். அவர்களுக்கு கீழ் 12 துணை ஆணையர்கள், அவர்களுக்கு கீழ் வடக்கு மண்டலத்தில் 10, மேற்கு மண்டலத்தில் 12, தெற்கு மண்டலத்தில் 17 கிழக்கு மண்டலத்தில் 9 என மொத்தம் 48 உதவி ஆணையர்கள் உள்ளனர். அதற்கு கீழ், நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் என பெரிதாக விரிகிறது.
சென்னை காவல்துறை மட்டுமே வருவாய் மாவட்டங்களைத்தாண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் வரை விரிந்து பரந்துள்ளது. தற்போது சென்னைக்குள் அதிகரிக்கும் மக்கள் தொகை, நிர்வாக காரணங்கள், காவல் எல்லை விரிவாக்கம் காரணமாக கவனிக்க முடியாமல் போவது, பராமரிப்பு போன்ற காரணங்களுக்காக சென்னையை இரண்டாக பிரித்து மீண்டும் புறநகர் ஆணையரகம் வருமா என்கிற கேள்வி எழுந்துக்கொண்டே உள்ளது.
இது தவிர சென்னைக்கு புறநகரில் அமைந்துள்ள தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடியும் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை அறிவிப்புக்கு ஏற்ப காவல்துறையையும் பிரிக்கலாம் என்கிற பரிந்துரை நெடுநாட்களாகவே உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் காவல் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது சென்னையை பிரித்து கூடுதல் ஆணையரகம் அமைக்கும் பரிந்துரைக்கு இசைவு தெரிவித்ததாக காவல்துறை வட்டாரத்தில் தகவல் வெளியானது. அவ்வாறு சென்னையை பிரிக்கும் முடிவை காவல்துறை மானிய கோரிக்கையின் கீழ் இன்று முதல்வர் அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக ஒன் இந்தியா கடந்த 9 ஆம் தேதியே செய்தி வெளியிட்டது. அதன்படி காவல்துறை மானியக்கோரிக்கையை முதலில் 9 ஆம் தேதி தாக்கல் செய்த நிலையில் அதன்மீது விவாதம் நடந்த நிலையில் இன்று காலை முதல்வர் காவல்துறை, தீயணைப்புத்துறையின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் சென்னை காவல் துறை 3 ஆக பிரிக்கப்படும் என அறிவித்தார்.
- சென்னை காவல் ஆணையரகம், 2. ஆவடி காவல் ஆணையரகம், 3. தாம்பரம் ஆணையரகம் என மூன்றாக பிரிக்கப்படுகிறது. அதற்கு முன் சென்னையின் காவல் மாவட்டங்கள் குறித்து பார்ப்போம். சென்னையில் தற்போது நான்கு மண்டலங்கள் டிஐஜி அந்தஸ்து அதிகாரிகளால் நிர்வாகிக்கப்படுகிறது. ஒவ்வொரு மண்டலத்தின் கீழும் 3 துணை ஆணையர்கள் தலைமையில் காவல் மாவட்டங்கள் என மொத்தம் 12 காவல் மாவட்டங்கள் உள்ளன.
இதில் சென்னையில் கூடுதலாக 2 காவல் மாவட்டங்களை உருவாக்க ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன் படி ஏற்கெனவே இருக்கும் 1.வண்ணாரப்பேட்டை, 2. பூக்கடை, 3.மாதவரம், 4.திருவல்லிக்கேணி, 5.கீழ்ப்பாக்கம், 6. மயிலாப்பூர், 7.அடையாறு, 8.தி.நகர், 9.மவுண்ட், 10. அண்ணாநகர், 11.புளியந்தோப்பு , 12. அம்பத்தூர் ஆகிய 12 காவல் மாவட்டங்களுடன் புதிதாக 13.பூந்தமல்லி, 14.தாம்பரம் என கூடுதலாக உருவாக்கப்படுகிறது.
சென்னையை மூன்று காவல் ஆணையரகமாக பிரிக்கப்பட்டால் புதிதாக உருவாக்கப்பட்டு சேர்க்கப்படும் இரண்டு காவல் மாவட்டங்களுடன் சேர்த்து 14 காவல் மாவட்டங்களில் 5, 5, 4 என்கிற விகிதத்தில் பிரிக்கப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 1. சென்னை காவல் ஆணையரகம், 2.தாம்பரம் ஆணையரகம், 3. ஆவடி காவல் ஆணையரகம், என இருக்கும். இதில் சென்னை, தாம்பரம் இரண்டும் 5 காவல் மாவட்டங்களை உள்ளடக்கி இருக்கும். ஏடிஜிபி அந்தஸ்த்தில் ஆணையர் இருப்பார், ஆவடி ஆணையரகம் 4 காவல் மாவட்டம் அடங்கிய நிலையில் ஐஜி அந்தஸ்த்தில் அதிகாரி இருப்பார் என்று கூறப்படுகிறது.
சென்னைக்கு 1.திருவல்லிக்கேணி, 2.கீழ்பாக்கம், 3. மயிலாப்பூர், 4. புளியந்தோப்பு, 5.பூக்கடை ஆகிய காவல் மாவட்டங்களும் , தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் 1. தாம்பரம், 2. மவுண்ட், 3. அடையாறு, 4. பூந்தமல்லி, 5.தி.நகர் ஆகிய காவல் மாவட்டங்களும், ஆவடி ஆணையரகத்தின் கீழ் 1.அண்ணாநகர், 2.அம்பத்தூர், 3. மாதவரம், 4.வண்ணாரப்பேட்டை ஆகிய காவல் மாவட்டங்களும் அடங்கும்.
இதற்கான பரிந்துரைகள், இடம் காவல் நிலையங்கள் ஒதுக்கப்படுவது குறித்த ப்ளூ பிரிண்ட் தயார் செய்யப்பட்டவுடன் சென்னை காவல் ஆணையர் தவிர புதிதாக உருவாக்கப்படும் தாம்பரம் ஆணையரகத்துக்கு ஏடிஜிபி அந்தஸ்த்தில் ஆணையரும், ஆவடிக்கு ஐஜி அந்தஸ்த்தில் ஆணையரும் நியமிக்கப்படுவார்கள்.