
சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய காமராஜ் கல்லூரியில், மாவட்ட காவல் துறை சார்பாக இன்று மாணவ, மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சைபர் குற்றப்பிரிவு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் முன்னிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் எஸ்.பி. ஜெயக்குமார் பேசுகையில், தற்போது கணினி வழி குற்றங்கள் பற்றி விழிப்புணர்வு மிக அவசியமான ஒன்றாகும். தற்போது வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைனில் பணபரிமாற்றம் செய்வது முதல் அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறோம். இது அறிவியல் வளர்ச்சி என்றாலும், அதில் நமக்கே தெரியாமல் நாம் கவனிக்காமல் கணினி வழி குற்றங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது.
எனவே அதனை பற்றிய அறிவும், விழிப்புணர்வும் கண்டிப்பாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். அதே போன்று ஏடிஎம் கார்டு பயன்படுத்தும் போதும் கவனமாக இருக்க வேண்டும். வங்கியில் இருந்து வங்கி அதிகாரி பேசுவது போன்று யாரேனும் தொடர்பு கொண்டு உங்கள் வங்கி கணக்கு தொடர்பான விபரங்களை கேட்டால் எந்த விபரங்களையும் கொடுக்க வேண்டாம். பெண்கள் தேவையில்லாமல் தங்கள் புகைப்படம் மற்றும் சுயவிபரங்களை சமூக வலை தளங்களில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் எப்பொழுதும் சமூக வலை தளங்களை பயன்படுத்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில், காவல் ஆய்வாளர் சிவசங்கரன், உதவி ஆய்வாளர் சுதாகரன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜன், வரலாற்று துறை தலைவர் முனைவர் தேவராஜ், வணிகவியல் துறை தலைவர் முனைவர் பொன்னுதாய், நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தென்பாகம் காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார், தென்பாக தனிப்பிரிவு தலைமை காவலர் மாரிக்குமார் மற்றும் காவல் துறையினர், கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
