
வேடசந்தூரில் காற்றாலை ஏற்றி வந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியது- பெரும் விபத்து தவிர்ப்பு
மகாராஷ்டிராவில் இருந்து ராட்சத காற்றாலையை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டு இருந்தது. இந்த லாரி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்துள்ள அய்யர் மடம் தனியார் மில் அருகே வந்தபோது திடீரென பழுதானது.
இதனால் டிரைவர் என்ன செய்வதென்று தெரியாமல் நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அங்கு வந்து லாரியை ஓரமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவாறு நிறுத்தினர்.
அப்போது தூத்துக்குடியில் இருந்து உப்பு ஏற்றிக் கொண்டு ஒரு லாரி பெங்களூர் நோக்கி சென்று கொண்டு இருந்தது. அந்த லாரியை முசிறியைச் சேர்ந்த ராஜா (50) என்பவர் ஓட்டி வந்தார்.
அதிகாலை 4 மணி அளவில் லாரியை ஓட்டி வந்த ராஜா சற்று கண் அயர்ந்துவிட்டார். இதனால் சாலையில் பழுதாகி நின்ற காற்றாலை ஏற்றி வந்த லாரி மீது மோதினார்.
அந்த சமயத்தில் முன்னால் சென்ற காரையும் கவனிக்காமல் அதன் மீது மோதி பின்னர் காற்றாலையின் இறக்கை மீது லாரி மோதி நின்றது. இதில் காரில் வந்த சாந்தராஜன் (25) என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் லாரியின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கி டிரைவர் ராஜா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கிய லாரியை ஓரப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது
