முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்த இரண்டு நபர்கள் கைது.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதப்பபுரத்தில் இருந்து கால்கரை ரோடு வேல்முருகன் தோட்டம் அருகே ரத்த காயத்துடன் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது இறந்த நபர் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த குமார் வயது (48) என்பது தெரியவந்தது. மேற்படி இறந்த குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு போலீசார் ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். கொலை குறித்து வள்ளியூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. சாந்தி அவர்கள் விசாரணை மேற்கொண்டதில், இறந்து போன குமார் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த சுடலையாண்டி வயது (54) என்பவரிடம் மது அருந்த பணம் கேட்டது சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதை மனதில் வைத்துக்கொண்டு சுடலையாண்டி மற்றும் முருகேசன் வயது (55) ஆகிய இருவரும் குமாரை சுடலையாண்டியின் மகன் வீட்டிற்கு செல்வதாக ஆட்டோவில் கால்கரைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். பின் மருதப்பபுரத்தில் இருந்து கால்கரை ரோட்டிலுள்ள வேல்முருகன் தோட்டம் அருகே சுடலையாண்டி,முருகேசன் ஆகிய இருவரும் சேர்ந்து குமாரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்தது. பின் இருவரையும் இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.