மதுரை மாவட்டம் அட்டப்பட்டி பகுதியில் 250 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
மதுரை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள் மதுரை மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்.
அதன்பேரில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் கீழவளவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அட்டப்பட்டி பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் மதுரை மாவட்ட தனிப்படையினர் அட்டப்பட்டி சென்று சோதனையிட்டதில் சுமார் 250 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் புகையிலை கடத்த பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டது. சட்டவிரோதமாக மேற்படி புகையிலைப் பொருட்களை வைத்து இருந்த சிங்கம்புணரியைச் சேர்ந்த சகாபுதீன் மகன் முஹம்மது ஹாரிஸ் அட பட்டியைச் சேர்ந்த ஹனிபா மகன் காதர் இப்ராஹிம் சிங்கம்புணரி சேர்ந்த நாகராஜ் மகன் செந்தில் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுதவிர மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் கடந்த இரண்டு நாட்களில் புகையிலை விற்பவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் மதுரை மாவட்டத்தில் புகையிலைப் பொருட்கள் பதுக்கல், விற்போர் மற்றும் கடத்துவோர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
