
மதுரை கோட்டைமேடு அருகே நடந்த கொலையில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கண்டுபிடித்த தனிப்படையினருக்கு பாராட்டு
மதுரை மாவட்டம் சமயநல்லூர் கோட்டம், அலங்காநல்லூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கோட்டைமேடு அருகே கடந்த 30.11.2021 அன்று தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காமக்காபட்டியைச் சேர்ந்த முருகன் மகன் பாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேற்படி பாண்டியன் என்பவர் மதுரையில் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட நபர் இன்னார் என்று தெரியாமல் இருந்தது, இதனையடுத்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள் உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினரின் சீரிய முயற்சியினால் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா தொட்டியபட்டி சேர்ந்த முனியாண்டி மகன் மார்நாடு என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது. எதிரியிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம் மற்றும் இறந்த நபரின் நான்கு சக்கர வாகனத்தையும் தனிப் படையினர் கைப்பற்றினர்.
மேற்படி மார்நாடு என்பவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்சமயம் இவர் ராணுவத்திற்கு வேலைக்குச் செல்லாமல் இருந்து வருகிறார் என்று விசாரணையில் தெரிய வருகிறது.
இச்சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்டு துரிதமாக எதிரியை கைது செய்த தனிப்படையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ. பாஸ்கரன் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
