
கைதிகளுக்கு கொரோனா போலீசாருக்கு தனிமை
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள சிறை கைதிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்களை அழைத்து வந்த போலீஸ்காரர்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானதால் அவரை ஸ்ரீவில்லிபுத்துார் சிறைக்கு அழைத்து வந்த போலீசார் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.
இதேபோல் நேற்றுமுன்தினம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கில் கைது செய்த ஒருவருக்கும் கொரோனா உறுதியானதால் அவரை இந்த சிறைக்கு அழைத்து வந்த போலீசாருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
தற்போது ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையத்தில் 5 கைதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மையத்தின் வெளிப்பகுதியில் இருந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
