
மதுரை, கமுதியை சேர்ந்த கொள்ளையர் மூவர் கைது: நகைகள், வாகனங்கள் பறிமுதல்
திருச்சுழி,விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே முன்னாள் ஊராட்சி தலைவர் காரை மறித்து நகை , அலைபேசிகளை வழிப்பறி செய்து விட்டு தப்பிய மதுரை ,கமுதியை சேர்ந்த 3 கொள்ளையரை போலீசார் கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை அருகே கொப்புசித்தம்பட்டியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர் 53 . இவர், அதே ஊரை சேர்ந்த பாலமுருகன், ராஜேந்திரன் உடன் காரில், 2021 டிச.18 ல் கமுதி அபிராமம் சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்தார். நார்த்தம்பட்டி — கொப்பு சித்தம்பட்டி ரோட்டில் வந்த போது 3 பேர் கும்பல் காரை வழிமறித்தனர். மூவரையும் தாக்கி 2 லட்சம் மதிப்பு நகைகள் , அலைபேசிகளை பறித்து சென்றனர்.
ரெட்டியபட்டி போலீசார் விசாரித்து வந்த நிலையில், தனிப்படை போலீசாரும் கொள்ளையர்களை தேடி வந்தனர்.நேற்று கமுதி விலக்கு சோதனை சாவடி அருகில் போலீசார் வாகன சோதனை செய்த போது, அவ்வழியாக டூவீலர்களில் வந்த மதுரையை சேர்ந்த திருமூர்த்தி 27, கமுதியை சேர்ந்த குருமூர்த்தி 28, கமுதி கொம்பூதியை சேர்ந்த சந்திரசேகரன் 24, ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இவர்கள் முன்னாள் ஊராட்சி தலைவரிடம் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து இவர்களிடமிருந்து 20 பவுன் நகை , இரு டூவீலர்களை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
