மதுரையில் கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 6 பேர் கைது
மதுரை எல்.கே.பி நகரில் கஞ்சா விற்பதாக சிலைமான் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது சக்கிமங்கலம் சக்திவேல் மனைவி மீனா (வயது 55), நாட்ராமங்கலம் மச்சக்காளை மனைவி மீனாட்சி (66) ஆகியோரிடம் இருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 2 பெண்களையும் கைது செய்த சிலைமான் போலீசார், தப்பி ஓடிய மருது என்பவரை தேடி வருகின்றனர்.
ஆண்டார் கொட்டாரம் அய்யனார் கோவில் பகுதியில் வாலிபர்கள் கஞ்சா விற்பதாக கருப்பாயூரணி போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவஇடத்தில் சோதனை நடத்தினர்.
அங்கு 1.100 கிலோ கிராம் கஞ்சாவுடன் வண்டியூர் பாலாஜி நகர் மாரிமுத்து என்ற மண்டமாரி (29) என்பவர் கைது செய்யப்பட்டார்.
ஒத்தக்கடை போலீசார் நேற்று இரவு நரசிங்கம் ஆற்றுக்கால் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அங்கு 3 மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் 3பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.
சந்தேகம் அடைந்த போலீசார் இருசக்கர வாகனங்களை சோதனை செய்தபோது அதில் 1.250 கிலோ கிராம் கஞ்சா மற்றும் ரூ. 2ஆயிரம் ஆகியவை இருந்தது. அவை பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக சீதாலட்சுமிநகர் அருண்குமார்(33), ஆண்டார் கொட்டாரம் பாண்டிகோவில் தெரு செல்வம் மகன் நாகராஜ் (21), ஆழ்வார்புரம் வைகைவடகரை செல்வம் (43) ஆகிய 3பேரும் கைது செய்யப்பட்டனர்.
