
மண்டபம் அகதிகள் முகாம் டிஜிபி அசுதோஷ் சுக்லா திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.
டிஜிபியாக பதவி உயர்வு பெற்ற பல கூடுதல் டிஜிபிக்களில் அசுதோஷ் சுக்லாவும் ஒருவர். 1986-ம் ஆண்டு பேட்ச் அதிகாரியான சுக்லா சென்னை காவல் ஆணையராகப் பதவி வகித்துள்ளார். சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக பதவி வகித்த அவர், பின்னர் அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்தார். சட்டம் ஒழுங்கு டிஜிபி போட்டியில் சில ரிமார்க் காரணமாக பின் தங்கினார்.
பின்னர் சிறைத்துறை டிஜிபியாக இருந்த அவர், நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் தேர்தல் டிஜிபியாக, இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டார். தேர்தலுக்குப் பின் ராமநாதபுரம் அகதிகள் முகாம் டிஜிபியாக மாற்றப்பட்டார்.
இந்நிலையில் இன்று அசுதோஷ் சுக்லாவை ராமநாதபுரம் அகதிகள் முகாமிலிருந்து சென்னை போக்குவரத்துக் கழக விஜிலென்ஸ் டிஜிபியாக மாற்றி உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.