
ஆன்லைன் லோன் – எச்சரிக்கிறார் சைலேந்திரபாபு
‘உங்களுக்கு பணக்கஷ்டமா? ஆதார் மட்டும் இருந்தாலே போதும். ஒரு சில நிமிடங்களில் லோன் கிடைக்கும்’ என்ற வாசகங்களுடன் ‘ஆன்லைன் லோன் ஆப்கள்’ தற்போது சத்தமில்லாமல் அதிகரித்து வருகிறது. தினமும் உங்களின் செல்போனுக்கு இரண்டு மெசேஜ் ஆவது இதுபோன்று வரக்கூடும். நாமும் வீண் அலைச்சல் எதுவுமின்றி, சட்டென்று லோன் கிடைக்கிறதே என பணத்தை வாங்கினால் போதும். பின்னர் வாங்கிய கடனுக்கு பல மடங்கு தொகையை திருப்பிக் கட்டுவது மட்டுமின்றி வீண் பாதிப்புக்கும் ஆளாக நேரிடுகிறது.
இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், ‘ஆன்லைன் மோசடி குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். சமீபத்தில் பயங்கரமான ஒரு மோசடி நடந்துள்ளது. ஆன்லைனில் லோன் வாங்குவதற்காக நிறைய ஆப்கள் வந்துள்ளன.
அந்த ஆப்பை டவுன்லோடு செய்து, கடனுக்கு விண்ணப்பிக்க வலியுறுத்துவர். உங்களின் புகைப்படம், நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் நான்கு பேரின் செல்போன் எண்கள், இமெயில் போன்ற தகவல்களையும் வாங்கிய பின்னரே நீங்கள் கேட்ட கடன் தொகையை கொடுப்பர். மூவாயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் வரை கடன் கிடைக்கும். பின்னர் சில நாளிலேயே அந்த புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து, உங்களை மிரட்டத் துவங்குவர். தொடர்ந்து உங்களின் உறவினர், நண்பர்களுக்கு அந்த ஆபாச புகைப்படத்தை அனுப்பாமல் இருக்க, பணம் கேட்டு மிரட்டி பிளாக்மெயில் செய்வர். நீங்களும் பயத்தில் வேறு வழியின்றி பணத்தை கொடுத்தால், லட்சக்கணக்கில் இழக்க வேண்டியிருக்கும். தொடர்ந்து உங்களை பிளாக்மெயில் செய்து பணத்தை வாங்கிக் கொண்டே இருப்பர்.
இதுபோன்ற நபர்களை சட்டப்படி கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் தினமும் பல்வேறு ஆப்கள் புதிது புதிதாக வந்து கொண்டே உள்ளன. எனவே உஷாரக இருங்கள். அதில், Euvalt, Masen Rupee, Lory loan, Wingo Loan, cici Loan, City loan போன்ற சில ஆப்களை டவுன்லோடு செய்வதை தவிர்க்கவும். ஏற்கனவே டவுன்லோடு செய்திருந்தால் அவற்றை ‘அன்இன்ஸ்டால்’ செய்து விடவும்; பாதுகாப்பாக இருங்கள். இது தமிழக காவல்துறையின் வேண்டுகோள்’ என டிஜிபி சைலேந்திரபாபு வலியுறுத்தி உள்ளார்.
