
பல இடங்களுக்கு கஞ்சா கடத்திய கும்பலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கடத்துவதற்காக 36 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக ஆத்தூரை சேர்ந்த வீரகுமார், வேலூர் மாவட்டம் சின்ன அணைக்கட்டைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி – ஒட்டன்சத்திரம் சாலையில் கஞ்சா கடத்துவதாக போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து 7.7.2020 அன்று அந்த சாலையில் போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது ஆத்தூர் பிரிவு அருகில் ஒரு ஆட்டோவில் 2 பேர் வந்தனர். அப்போது ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
இதில் பல்வேறு பகுதிகளுக்கு கடத்துவதற்காக 36 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த வீரகுமார் (வயது 36), வேலூர் மாவட்டம் சின்ன அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (37) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சுரேந்திரன் ஆஜரானார். விசாரணை முடிவில், வீரகுமார், சுரேஷ் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் தீர்ப்பளித்தார்.
