ஃபேஸ்புக்கில் அறிமுகம்; போலீஸ் வேடத்தில் பணம்பறிப்பு!-ஆந்திர வியாபாரியைக் கிறங்கடித்த வேலூர் கும்பல்
ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான ஆந்திர வியாபாரியைத் திட்டமிட்டு வேலூர் வரவழைத்து, ஐந்து லட்சம் ரூபாயை போலீஸ் வேடத்தில் பறித்த மூன்று பேரை போலீஸார் கைதுசெய்தனர்.
ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்தவர் நேசக்குமார் (42), வியாபாரி. இவருக்கு, வேலூரைச் சேர்ந்த ஓர் இளைஞர் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமானார். அவர் தன் நண்பர்கள் நான்கு பேரை நேசக்குமாருக்கு முகநூல் மூலமே அறிமுகம் செய்துவைத்தார். ஐந்து பேரும் சேர்ந்து நேசக்குமாரிடம் பணம் பறிக்க திட்டமிட்டனர்.
`எந்தவித ஆவணங்களுமே இல்லாமல் 50 லட்சம் ரூபாயைக் குறைந்த வட்டியில் கடனாக வாங்கித்தர முடியும்’’ என்று மாறி மாறி ‘சாட்டிங்’ செய்தனர். கட்டுக்கட்டாகப் பணத்தைக் கையில் வைத்திருப்பதைப் போன்ற படங்களையும் பதிவிட்டனர். இதைக் கவனித்த நேசக்குமார், ‘தன் மகளை மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதற்காக 50 லட்சம் தேவைப்படுகிறது. எனக்குக் கடனாக வாங்கித்தாங்க நண்பர்களே’ என்று ‘சாட்’ செய்தார். அந்தக் கும்பல் நினைத்ததைப் போன்றே
தூண்டிலில் சிக்கிய மீனைப்போல்’ நேசக்குமார் சிக்கினார். பணம் வாங்கித் தருகிறோம். எங்களுக்கு ஐந்து லட்சம் ரூபாயை கமிஷனாகக் கொடுங்கள்’ என்றுகூறினர். கடந்த ஆகஸ்ட் மாதம், ஐந்து லட்சம் பணத்துடன் நேசக்குமார் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கிரீன் சர்க்கிள் பகுதிக்கு வந்து ஃபேஸ்புக் கும்பலை சந்தித்தார்.
கடன் தருபவர் காஞ்சிபுரத்தில் இருக்கிறார்’ என்று கூறி ஏற்கெனவே தயாராக நிறுத்தப்பட்டிருந்த காரில் நேசக்குமாரை அழைத்துக்கொண்டு புறப்பட்டனர். காஞ்சிபுரம் அருகே சென்றபோது, போக்குவரத்து குறைவாக இருந்த பகுதியில் போலீஸ் சீருடையில் நின்றிருந்த மூன்று பேர் காரை மடக்கி சோதனை செய்வதைப்போல், மிரட்டும் தொனியில் பேசினர்.
நாங்கள் போலீஸ். காரில் உள்ள வேலூர் கும்பல் மீது சந்தேகம் இருக்கிறது’ என்றுகூறித் துருவி துருவி விசாரணை நடத்துவதைப்போல் நேசக்குமாரை அச்சப்பட வைத்தனர். அவரிடமிருந்த ஐந்து லட்சம் ரூபாயை போலீஸ் சீருடையிலிருந்த கும்பல் பறித்துக்கொண்டு,
யார் நீ, இவர்களுடன் என்ன செய்கிறாய். நீ காவல் நிலையம் வந்து பணத்தை வாங்கிக்கொள்’ என்றுகூறிவிட்டு நேசக்குமாரை மட்டும் அங்கேயே இறக்கிவிட்டனர். வேலூர் கும்பலுடன் போலீஸ் சீருடையிலிருந்த மூன்றுபேரும் காரில் ஏறிச் சென்றுவிட்டனர். நேசக்குமாருக்கு ஒன்றுமே புரியவில்லை. காஞ்சிபுரம் காவல் நிலையத்துக்குச் சென்று நடந்ததை விவரித்தார்.
அதன் பிறகே, ஃபேஸ்புக்கில் தன்னுடன் பேசி வரவழைத்தவர்கள் நல்லவர்களும் இல்லை; சீருடையில் இருந்தவர்கள் போலீஸும் இல்லை’ என்று நேசக்குமார் புரிந்துகொண்டார். காஞ்சிபுரம் போலீஸார், வேலூர் போலீஸில் புகார் தருமாறு அனுப்பி வைத்தனர். வேலூர் வடக்குக் காவல் நிலையத்துக்கு வந்து நேசக்குமார் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து கிடுக்கிப்பிடியாக விசாரணை மேற்கொண்டார். நேசக்குமாரும்,
ஆவணங்கள் இல்லாமல் பெறப்படும் 50 லட்சத்தைத் திரும்ப தரக்கூடாது’ என்ற திட்டத்துடன்தான் வேலூரைச் சேர்ந்த மோசடி கும்பலுடன் பழகியிருப்பது தெரியவந்தது. எனினும், போலீஸ் சீருடையை அணிந்து ஆளைக் கடத்தி பணம் பறிக்கும் கும்பலைப் பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டினர். கடந்த இரண்டு மாதங்களாக அந்தக் கும்பல் குறித்துத் துப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், வேலூர் நேஷனல் சர்க்கிள் அருகே இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீஸார் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஓர் காரை மடக்கி சோதனை செய்தனர். காருக்குள் போலீஸ் சீருடைகள் இருந்தன. காரிலிருந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தியதில், முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனர்.
போலீஸார் தங்கள் பாணியில் விசாரணையைத் தொடங்கினர். காட்பாடியைச் அடுத்த வடுகந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (32), வேலூர் பூந்தோட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (34), காட்பாடி காந்திநகரைச் சேர்ந்த சஜத்முகமது (41) என்பதும் ஆந்திராவைச் சேர்ந்த நேசக்குமாரிடம் போலீஸ் வேடத்தில் பணம் பறித்த கும்பல், இவர்கள்தான் என்பதும் தெரியவந்தது.
போலீஸ் வேடத்தில், மேலும் நான்கைந்து பேரிடமும் பணம் பறித்திருப்பதை ஒப்புக்கொண்டனர். மூன்று பேரையும் கைதுசெய்த போலீஸார், வேலூர் நீதிமன்றத்தில் ஜூடிசியல் (எண்-4) மாஜிஸ்திரேட் ஜெகநாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
அவர்களிடமிருந்து 10,000 ரொக்கப் பணம், இரண்டு சொகுசு கார்கள், போலீஸ் சீருடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கும்பலுக்கு பின்புலமாக உள்ள ஃபேஸ்புக் கும்பலையும் போலீஸார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் :திரு சந்தோஷ் அம்பத்தூர்