குடோன்களாக மாறும் வீடுகள்; குட்கா விற்பனை தாராளம்!’- அதிரடி ரெய்டில் வேலூர் போலீஸ் பெங்களூரிலிருந்து வேலூருக்கு கடத்திவரப்பட்ட குட்கா பான்மசாலாவை மூட்டை மூட்டையாக போலீஸார் பறிமுதல் செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பாக்குகள், வேலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக புழங்குகிறது. பெங்களூரு உட்பட பல்வேறு வெளிநகர மார்க்கெட்டுகளிலிருந்து குட்காவை லோடு லோடாக வேலூருக்குக் கொண்டுவருகிறார்கள். வீடுகளை குடோன்களாக மாற்றி
ஸ்டாக்’ வைத்து விற்பனைப் பிரதிநிதிகள் மூலம் கடைகளுக்குக் கொண்டு சென்று விநியோகம் செய்கிறார்கள். சட்டவிரோதம் எனத் தெரிந்தும் பெட்டிக்கடைகளில் வாங்கிவைத்து படுஜோராக விற்பனை செய்கிறார்கள்.
வேலூர் மாநகரில் பதுங்கியிருக்கும் குட்கா கும்பலை அவ்வப்போது காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், பெங்களூரிலிருந்து குட்கா கடத்திவந்த லோடு ஆட்டோவை ரகசிய தகவலின் பேரில், கொணவட்டம் பகுதியில் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீஸார் மடக்கிப்பிடித்தனர்.
அதில், மூட்டை மூட்டையாக 541 கிலோ எடையிலான குட்கா, பான் மசாலா இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.2,78,880 எனத் தெரியவந்தது. வாகனத்துடன் போதைப் பாக்குகளைப் பறிமுதல் செய்த போலீஸார், அதைக் கடத்திவந்த மூன்று பேரை கைதுசெய்தனர்.
விசாரணையில் அவர்கள், வேலூர் சைதாப்பேட்டை வாணித் தெருவைச் சேர்ந்த மோங்கிலால் (27), கீபாராம் (19) மற்றும் வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர் துரையேரியைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜ்குமார் (33) என்பது தெரியவந்தது. இவர்களின் பின்னணி குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஜூன் மாதம், வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து நான்கு டன் எடையிலான குட்காவை குற்ற நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, தமிழக அரசியல் கட்சிப் பிரமுகர் உட்பட இரண்டுபேர் கைதுசெய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் :சந்தோஷ் அம்பத்தூர் சென்னை