
குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் ஓமந்தூரான் வயது 46. கேரள மாநிலத்தில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். கடந்த பிப். 27ம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஓமந்தூரானின் 16 வயது மகன் சத்திரப்பட்டி போலீசில் கிரிக்கெட் மட்டையுடன் சரணடைந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். தனது மகனின் கொலை வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டுமென ஓமந்தூரானின் தந்தை ரங்கசாமி போலீஸ் உயரதிகாரிகளிடம் மனு அளித்தார். இதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் ஓமந்தூரான் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதும், அதில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக கொலை நடந்த 6 மாதங்களுக்கு பிறகு ஓமந்தூரானின் மனைவி பாண்டீஸ்வரி வயது 37, பாண்டீஸ்வரியின் சித்தி கிருஷ்ணவேணி வாயது 55, மாமா ராமையா வயது 62, அத்தை லட்சுமி வயது 50 ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் குற்றவாளிகளை தப்ப விடும் நோக்கில் செயல்பட்டதாக, சத்திரப்பட்டி பெண் காவல் ஆய்வாளர் சத்தியபிரபாவை சஸ்பெண்ட் செய்து டிஐஜி ரூபேஷ்குமார் மீனா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
