

மதுரை மேலூர் பகுதியில் 95 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் ரொக்கம் ஒரு லட்சம் கொள்ளை வட மாநில கொள்ளை கும்பல் கைவரிசை
மதுரை மாவட்டம் மேலூர் குமார் நகரை சேர்ந்தவர் பிரபுசங்கர் (வயது 45). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார்.
மேலூரில் உள்ள அவரது வீட்டில் மாடிப்பகுதியை மட்டும் வாடகைக்கு விட்டுள்ளார். பிரபு சங்கரின் வீட்டை அவரது மாமனார் பாலகிருஷ்ணன் அடிக்கடி வந்து பார்த்து செல்வார். அதே போல் நேற்று வந்து பார்த்த போது, வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் சிதறி கிடந்தன. இதுகுறித்து அவர் மேலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது அவரது வீட்டின் ஜன்னல் கம்பிகள் உடைந்திருந்தன. மேலும் பீரோவில் இருந்த 95 பவுன் தங்கநகைகள்,45 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளைய டிக்கப்பட்டிருந்தது. யாரோ மர்ம நபர்கள் பிரபு சங்கரின் வீட்டிற்குள் ஜன்னலை உடைத்து அதன் வழியாக புகுந்து வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியஸ் ரெபோனி, இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தினர். பிரபு சங்கரின் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை அடையாளம் காண அந்த பகுதியில் வைக்கப்பட்டி ருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அப்போது அதில் முகத்தை மறைத்தபடி துணியை சுற்றி கொண்டு 6 பேர் கும்பல் பிரபு சங்கரின் வீட்டிற்குள் புகுந்த காட்சிகள் பதிவாகி இருந்தன. அவர்கள் அனைவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் போல் உள்ளனர். இதனால் பிரபு சங்கர் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டது வடமாநில கும்பல் என்பதை உறுதி செய்துள்ளனர்.
அவர்களை பிடிக்க துணை சூப்பிரண்டு தலைமையில் 2 தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
