
மின்வாரியத்தில் இருந்து பேசுவதாக கூறி ஓய்வு பெற்ற அதிகாரி வங்கி கணக்கில் ரூ.1.19 லட்சம் நூதன திருட்டு
மின்வாரியத்தில் இருந்து பேசுவதாக, ஓய்வு பெற்ற அதிகாரிகயிடம் மர்ம நபர் நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்துள்ளார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை கே.புதூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த 69 வயதுடைய முதியவர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் கோட்ட பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருக்கு சில நாட்களுக்கு முன்பு செல்போனில் குறுந்தகவல் வந்தது.
அதில் உங்கள் நடப்பு மாத மின் கட்டணத்தொகை செலுத்தியது பதிவாகவில்லை. எனவே கட்டணம் செலுத்திய ரசீதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பி வைக்குமாறும், இல்லையென்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்த முதியவர் உடனே குறிப்பிட்ட எண்ணுக்கு மின் கட்டண ரசீதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பி வைத்தார். அப்போது அவருக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர் மின்வாரியத்தில் இருந்து பேசுவதாகவும், உங்கள் மின் கட்டண தொகையில் ரூ. 10 பாக்கி உள்ளது. அதனை குறிப்பிட்ட செயலி மூலம் செலுத்துமாறு கூறியுள்ளார். மேலும் அந்த செயலிக்குறிய லிங்க்கையும் அந்த நபர் அனுப்பியுள்ளார்.
அதனை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்ட ஓய்வு பெற்ற அதிகாரி, அதில் தனது ஏ.டி.எம். கார்டு விவரங்களை பதிவு செய்து ரூ. 10 செலுத்தியுள்ளார். இந்த நிலையில் அவரது வங்கி கணக்கில் இருந்து 3 தவணைகளாக ரூ. 1.19 லட்சம் எடுக்கப்பட்டிருப்பதாக அவருக்கு தகவல் வந்தது. மின்வாரியத்தில் இருந்து பேசுவதாக, ஓய்வு பெற்ற அதிகாரிகயிடம் மர்ம நபர் நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்துள்ளார்.
இதுகுறித்து அந்த முதியவர், மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
