Police Department News

மதுரையிலிருந்து துாத்துக்குடிக்கு போலீஸ்காரரை இடமாறுதல் செய்த உத்தரவை கர்மா கொள்கையை பின்பற்றி ரத்து செய்வதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரையிலிருந்து துாத்துக்குடிக்கு போலீஸ்காரரை இடமாறுதல் செய்த உத்தரவை கர்மா கொள்கையை பின்பற்றி ரத்து செய்வதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை ஸ்ரீமுருகன் தாக்கல் செய்த மனு: காவல்துறையில் 2003 ல் இரண்டாம் நிலை போலீஸ்காரர் பணியில் சேர்ந்தேன். அவனியாபுரம் ஸ்டேஷனில் எழுத்தராக பணிபுரிந்தேன். என்னை துாத்துக்குடி மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்து தென்மண்டல போலீஸ் ஐ.ஜி., மற்றும் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டனர். இதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார்.

மனுதாரர் தரப்பு: மனுதாரர் 2011 ல் விபத்தில் சிக்கியதில் தலையில் காயம் ஏற்பட்டது. சிகிச்சையில் இருந்தார். மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது. சிகிச்சை முடிந்து பணியில் சேர அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அடிக்கடி தலைச்சுற்றல், ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது. இதனால் சில நேரங்களில் விதிகளை பின்பற்றாமல் மருத்துவ விடுப்பு எடுத்ததாக அவருக்கு எதிராக துறை ரீதியாக பல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனால் மனுதாரர் பல தண்டனைகளை அனுபவித்தார். மனுதாரர் நேர்மையானவர். உயரதிகாரி அல்லது வேறு எந்த நபரின் அழுத்தத்திற்கும் அவர் அடிபணிவதில்லை. தனது கடமைகளை சரியாக நிறைவேற்றினார். இதனால் அவர் பல இடையூறுகளை எதிர்கொண்டார்.

மனுதாரர் 18 மாதங்களில் 4 இடமாறுதல் உத்தரவுகளை எதிர்கொண்டார். இடமாறுதல் தற்செயலாக இருந்தாலும், துாத்துக்குடிக்கு இட மாற்றம் செய்தது உள்நோக்கம் கொண்டது. மனுதாரருக்கு எதிராக ஒரு புகார் கூட இல்லை. மனுதாரருடன் பணியில் சேர்ந்த போலீசார் அதிக சம்பளம் பெறுகின்றனர். மனுதாரர் மிகக் குறைந்த சம்பளம் பெறுகிறார். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இடமாறுதலை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தது.தமிழக அரசுத் தரப்பு: மனுதாரர் உயரதிகாரிகளை மதிப்பதில்லை.

அவர்களுக்கு எதிராக செயல்பட்டார். பழிவாங்கும் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறார். அவருக்கு சம்பள உயர்வு ஒத்திவைக்கப்பட்டது. அவரது அணுகுமுறையானது உடன் பணிபுரியும் போலீசாரிடையே பிளவை உருவாக்கியது. தகவல் உரிமை சட்டத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி தனக்கு சாதகமான செயல்களை செய்து கொள்கிறார். தல்லாகுளம், எஸ்.எஸ்.,காலனிக்கு மாற்றப்பட்டபோது அங்கு அலட்சியமாக நடந்துகொண்டார். ஸ்டேஷன் பொறுப்பு அலுவலர்களாக இருந்தவர்கள் மீது பொய் புகார்களை அனுப்பினார்.

இதனால் அவனியாபுரத்திற்கு மாற்றப்பட்டார். மனுதாரர் தொடர் தண்டனைகளைப் பெற்றதால், அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. மனுதாரரின் தவறான செயல்கள் குறித்து அறிக்கை தயாரித்து ஐ.ஜி.,க்கு அனுப்பப்பட்டது. இதனடிப்படையில் நிர்வாகக் காரணங்களுக்காக மனுதாரரை துாத்துக்குடி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் உள்நோக்கம் இல்லை. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தது.

நீதிபதி: மனுதாரர் சீருடைப் பணியில் உள்ளார். ஏற்கனவே தண்டனையை அனுபவித்து, மிகக்குறைந்த சம்பளம் பெறுகிறார். குற்றச் செயலுக்குக்கூட, சீர்திருத்தக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் தண்டனை வழங்கப்படுகிறது. கர்மாவின் கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம் இந்நீதிமன்றம் மனுதாரருக்கு நிவாரணம் வழங்க முன்வருகிறது. கர்மாவின் கொள்கைகளில் ‘சஞ்சித கர்மா’ (முழு கர்மா), ‘பிராரப்த கர்மா’ (கர்மாவின் ஒரு பகுதி) எனப் பிரிக்கப்பட்டு, ‘பிராரப்த கர்மா’விற்கு மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது.

மனுதாரரை தொலைதுார இடத்திற்கு மாற்றுவது பொருளாதார ரீதியாக துயரத்தை அதிகரிக்கும். மனுதாரருக்கு எதிரான இடமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.அவரை போக்குவரத்து காவலராக மதுரை மாவட்டத்தில் நியமிக்க ஐ.ஜி.,மற்றும் போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடப்படுகிறது. மனுதாரர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்வது உட்பட பிற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தனது போலீஸ் பணியை தொடர வேண்டும் என இந்நீதிமன்றம் அறிவுறுத்துகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published.