
ரேஷன் கடைக்கு, ஊழியர்கள் நியமன தேர்வு வெளிப்படையாக நடக்க உள்ளதால், யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்’ என, கூட்டுறவு துறை அறிவுறுத்திஉள்ளது.
கூட்டுறவு துறை நடத்தும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள, 4,300 விற்பனையாளர், எடையாளர் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்காக, கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் வாயிலாக, அடுத்த வாரத்தில் இருந்து அறிவிப்பாணைகள் வெளியிடப்பட உள்ளன. வரும் டிசம்பருக்குள் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு, ஜனவரியில் பணி ஆணை வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் தலைவர், துணை தலைவராக உள்ள அரசியல் கட்சியினர், ரேஷன் ஊழியர் வேலை வாங்கி தருவதாக, இளைஞர்களிடம் பணம் வசூல் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கடைகளை, கூட்டுறவு சங்கங்கள் தான் நடத்துகின்றன.
ரேஷன் கடை வேலையையும், அரசு வேலையையும் சமமாக கருத வேண்டாம். ரேஷன் கடைக்கு ஆட்கள் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பம் பெறுவது, நேர்காணல் என, அனைத்தும் வெளிப்படையாக நடத்தப்படும்.முறை கேடை தடுக்க, தேர்வு தொடர்பாக எப்போதும் இல்லாத வகையில், பல வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
எனவே, வேலை வாங்கி தருவதாக கூறும் யாரிடமும் ஏமாற வேண்டாம். பொது வினியோக திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்டவை தொடர்பான செய்திகளை நன்கு படித்து, தேர்வுக்கு தயாராகினால் சுலபமாக வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
