
மதுரை வலையங்குளத்தில் அண்ணன்-தம்பியை வெட்டிவிட்டு அரிவாளுடன் திரிந்த 4 பேர் கைது
மதுரை அவனியாபுரம் அருகே உள்ள வலையங்குளம் பகுதியை சேர்ந்த ஊமை என்பவரின் மகன்கள் அழகுராஜா (வயது 37), திருமண் (35). இவர்கள் இருவரும் நேற்று மாலை அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் 9 பேர் வந்தனர். அவர்கள் திடீரென பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அழகு ராஜா, திருமண் ஆகிய இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அண்ணன்-தம்பி இருவரையும் அந்த பகுதியில் நின்றவர்கள் மீட்டு ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அண்ணன்-தம்பியை வெட்டிய கும்பல் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்களை அரிவாளால் தாக்கினர். மேலும் அரிவாளுடன் அந்த பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும்விதமாக சுற்றிதிரிந்தனர்.
அதனை அந்த பகுதியில் நின்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். அரிவாளுடன் கும்பலாக வாலிபர்கள் சுற்றிதிரிந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தகுமார், பெருங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி லதா மற்றும் போலீசார் சென்றனர். அரிவாளுடன் திரிந்த கும்பல் குறித்து அந்த பகுதியில் விசாரணை நடத்தினர்.
அப்போது அண்ணன்-தம்பியை வெட்டிவிட்டு திரிந்தது வலையங்குளம் பெருமாள் நகர், வலையம்பட்டி பகுதியை சேர்ந்த 9 பேர் என்பது தெரியவந்தது. அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்களில் முருகன் மகன் வினோத் (23), ஆறுமுகம் மகன் முத்துக்குமார் (23), நாகராஜ் மகன் வைரமுத்து (22), வலையம்பட்டியை சேர்ந்த முனியசாமி மகன் சஞ்சய்குமார் (22) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கைதான 4 பேரிடமும் அண்ணன்-தம்பியை அரிவாளால் வெட்டியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
