திருச்சி சிறையில் `திருவாரூர்’ முருகன்! – 54 நாள்கள் முயற்சிக்குப் பின் தமிழகம் கொண்டுவந்த போலீஸார்
நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, கொள்ளையன் திருவாரூர் முருகன் தமிழக போலீஸார் வசம் வந்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி, திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளையடிக்கப்பட்டது. இந்தக் கொள்ளை சம்பவத்தில், 28 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
போலீஸாரின் தீவிர தேடுதலில், கடந்த 3-ம் தேதி இரவு, திருவாரூர் அருகே இருவர் மடக்கப்பட்டனர். அதில், ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அடுத்தடுத்த விசாரணையில், தப்பியோடியவர் திருவாரூர் முருகன் எனும் கொள்ளையனின் மைத்துனர் சுரேஷ் என்பது தெரியவந்தது.
கூடவே, லலிதா ஜுவல்லரி நகைக்கடையின் 4.5 கிலோ நகைகள் கைப்பற்றப்பட்டன. இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் திருவாரூர் முருகன் குறித்துப் பலருக்கும் தெரியவந்தது. இந்தக் கும்பல் மீது, கர்நாடகா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், இவர்கள் கிராமப்புற பின்தங்கிய வங்கிகள், பாதுகாப்பற்ற நகைக்கடைகளை குறிவைத்து கொள்ளையடித்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார், முருகனின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அவர்களைக் காப்பாற்றுவதற்காக முருகனின் மைத்துனர் சுரேஷ் மற்றும் திருவாரூர் முருகன் ஆகியோர் நீதிமன்றங்களில் சரணடைந்தனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள வழக்கு ஒன்றில் போலீஸ் கஸ்டடி எடுக்கப்பட்ட திருவாரூர் முருகனின் 8 நாள் விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது. திருச்சி இன்ஸ்பெக்டர் கோசலைராமன் தலைமையிலான போலீஸார் நேற்று இரவு பெங்களூரு சென்றனர்.
இம்முறை கோட்டை விட்டுவிடக்கூடாது என எச்சரிக்கையாகச் செயல்பட்ட அவர்கள், நீதிமன்றத்தில் நேற்று முறையிட்டனர். தமிழக போலீஸாரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட பெங்களூரு நீதிபதி திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டார். அதையடுத்து, நீதிமன்ற அனுமதியுடன் திருவாரூர் முருகன் திருச்சி கொண்டுவரப்பட்டார்.
முருகன், கடந்த மாதம் 10-ம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அடுத்து அவர், கர்நாடக போலீஸாருடன் திருச்சி வந்து, கொள்ளிடம் ஆற்றங்கரையில் புதைத்து வைத்திருந்த 12 கிலோ தங்க நகைகளை எடுத்துக் கொடுத்தார்.
தொடர்ந்து கடந்த 54 நாள்களாக கர்நாடக போலீஸாரின் கஸ்டடியில் அவர் இருந்தார். முருகனை போலீஸ் கஸ்டடி எடுக்க 8 முறைக்கும் மேல் தமிழக போலீஸார், கர்நாடக நீதிமன்றத்தில் மனு போட்டனர். ஆனால், தொடர்ந்து அம்மாநில போலீஸாரே, கஸ்டடி எடுத்ததால் திருச்சி தனிப்படை போலீஸார் வசம் முருகன் வர தாமதம் ஆனது.
இவ்வழக்கில் சுரேஷ், கணேசன், கனகவல்லி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு திருச்சி சமயபுரம் பாஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பல கொள்ளைகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் அனைவரையும் திருச்சி போலீஸார், பலமுறை கஸ்டடி எடுத்து துருவித் துருவி விசாரித்தனர். ஆனாலும், முருகன் தமிழக போலீஸார் வசம் கிடைக்காததால் வழக்கு விசாரணை மந்தமானது.
திருச்சி கொண்டுவரப்பட்ட முருகன், திருச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2 திரிவேணி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். தொடந்து அவரை, திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். முகத்தில் முகமூடி அணிந்துகொண்டு வந்த அவர்,
இந்நிலையில் முருகன் இன்று காலை மீண்டும் ஆஜர்படுத்த உள்ளதாகவும், அவரை போலீஸார் 15 நாள்கள் போலீஸ் கஸ்டடிக் கேட்டு மனு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. நீண்ட இழுபறிக்குப் பிறகு முருகன், தமிழக போலீஸார் வசம் வந்துள்ளதால், லலிதா ஜூவல்லரி கொள்ளை விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூ