
தேவா் ஜெயந்தி விழா: போலீஸ் அதிகாரிகளுடன் கூடுதல் டிஜிபி ஆலோசனை
மருதுபாண்டியா் குருபூஜை, தேவா் ஜெயந்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரையில் காவல்துறை உயா் அலுவலா்களுடன், கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோயிலில் சுதந்திர போராட்ட வீரா்கள் மருதுபாண்டியா்கள் குருபூஜை அக். 27- இல் அனுசரிக்கப்படுகிறது. அதேபோல், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் அக். 29, 30- ஆம் தேதிகளில் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா, குருபூஜை நடைபெறுகிறது.
இதையொட்டி, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், அமைச்சா்கள், முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன், முன்னாள் அமைச்சா்கள், அரசியல் கட்சித் தலைவா்கள், சமுதாயத் தலைவா்கள் என முக்கியப் பிரமுகா்கள் தேவரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
இதன் காராணமாக மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா்.
இந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரையில் போலீஸ் உயா் அலுவலா்களுடன் தமிழக கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆலோசனை நடத்தினாா். அப்போது முதல்வா் உள்ளிட்டோருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், தென்மண்டல ஐஜி அஸ்ரா கா்க், மாநகர காவல் ஆணையா் செந்தில்குமாா், டிஐஜி ஆா். பொன்னி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
