
மதுரையில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த கொள்ளை கும்பல் கைது
மதுரை கே.புதூரில் ஆயுதங்களுடன் மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் 6 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
மதுரை:
மதுரை கே.புதூரில் ஆயுதங்களுடன் மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
அதன்பேரில் மதுரை வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், அண்ணா நகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனையின் பேரில், கே.புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று காந்திபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அரசு ஐ.டி.ஐ. மைதானத்தில் 10 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்தனர். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
இருந்தபோதிலும் அவர்களில் 6 பேரை, தனிப்படை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 2 அரிவாள், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து போலீசார் 6 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
இதில் அவர்கள் அழகர் கோவில் மெயின் ரோடு, மாத்தூர் காலனியைச் சேர்ந்த அந்தோணி (வயது 38), பெருங்குடி, அம்பேத்கர் நகர் மகாலிங்கம் மகன் தொட்டி முருகன் (23), மாரிமுத்து மகன் கருமலை (23), பெருங்குடி இருளப்பன் (28), பெருங்குடி, அம்பேத்கர் நகர், பால்பாண்டி மகன் பாண்டியராஜன் (23), பெருங்குடி மேரி மாதா நகர், கணேசன் மகன் பழனி முருகன் (22) என்பது தெரிய வந்தது. அவர்கள் மதுரை கொள்ளையில் ஈடுபடுவதற்காக ஒன்றாக கூடி திட்டமிட்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து ஆயுதங்களுடன் சிக்கிய 6 பேரையும் கே.புதூர் போலீசார் கைது செய்தனர்.
