
தலைமறைவு குற்றவாளி கைது; எஸ்.பி. பாராட்டு
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லநாடு நாணல்காடு பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் இசக்கிபாண்டி (22). என்பவரை முன்விரோதம் காரணமாக நாணல்காடு ஆற்றுபாலம் அருகே 12.9.19 அன்று வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இவ்வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இவ்வழக்கின் 2வது எதிரியான வல்லநாடு பக்கப்பட்டியை சேர்ந்த சுப்பையா மகன் மாரிமுத்து (26) என்பவர் மட்டும் கடந்த 2 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். தலைமறைவாகவுள்ள மாரிமுத்துவை கைது செய்ய தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. பொன்னரசு மேற்பார்வையில் முறப்பநாடு இனஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் எஸ்.ஐ.க்கள் ராஜாராபர்ட், ஜெயராமசுப்பிரமணியன், ஏட்டு சுந்தரராஜன், முதல் நிலை காவலர்கள் சதீஷ் தணிகைராஜா, சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் மேற்படி தனிப்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று (11.8.21) வல்லநாட்டிலிருந்து பக்கப்பட்டிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த மாரிமுத்துவை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2 வருடங்களாக தலைமறைவாக இருந்த மாரிமுத்துவை கைது செய்த மேற்படி தனிப்படை போலீசாரை எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டினார்.
