பாலக்கோடு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
தர்மபுரி பாலக்கோடு: பாலக்கோடு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர். காதலுக்கு எதிர்ப்பு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தீர்த்தகிரி நகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். காண்டிராக்டர். இவரது மகன் அரவிந்த் பிரசாத் (வயது26). டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் மாதுராஜ். இவரது மகள் அனிசா (21). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட் படித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். அரவிந்த் பிரசாத்தும், அனிசாவும் பள்ளியில் படிக்கும் போது இருந்தே காதலித்து வந்துள்ளனர். கடந்த 6 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். காவல் நிலையத்தில் தஞ்சம் இந்தநிலையில் நேற்று காதல் ஜோடி 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி ஊத்தங்கரை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு பாலக்கோடு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் காவல்துறையினர் இரு வீட்டாரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண்ணின் பெற்றோர் இவர்களின் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இருவரும் திருமண வயதை அடைந்து விட்டதால் காவல்துறையினர் என்ஜினீயரின் தந்தை பன்னீர்செல்வத்துடன் காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர். இருவீட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையம் முன்பு திரண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.