மாணவிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க எடுத்த நடவடிக்கை என்ன?- அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
மதுரையைச் சேர்ந்த விக்டோரியா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் சட்டப்படிப்பு முடித்து ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறேன். அரசு கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்திருந்தேன். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி அன்று சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
அந்த வீடியோவில், மதுரை கோரிப்பானையந்தில் உள்ள மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி வழியே தத்தனேரி மயானத்திற்கு சென்ற சவ ஊர்வலத்தில் பங்கேற்ற இளைஞர்கள் மது அருந்திவிட்டு, கூச்சலிட்டும் மாணவிகளை அச்சுறுத்தியும், அதை தட்டிக்கேட்ட மாணவியின் தந்தையை அடித்து தாக்கி, அங்கிருந்த மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினர். மாணவிகள் அனைவரும் கல்லூரி முடிந்து வெளியே வரும்போது நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தை பார்த்து பயந்துபோய் மாணவிகள் மீண்டும் கல்லூரிக்குள் சென்று விட்டனர்.
இது தொடர்பாக மதுரை செல்லூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சம்மந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல் கடந்த 30-ந்தேதி தேவர் குரு பூஜை அன்று மதுரை சொக்கிக்குளத்தில் உள்ள லேடி டோக் மகளிர் கல்லூரிக்குள், மோட்டார் சைக்கிள்களில் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள், அங்கிருந்த காவலாளிகளை தாக்கியதுடன் மாணவிகளை ஆபாச வார்த்தைகளில் திட்டி அராஜகத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மதுரை கே.புதூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சம்மந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஒவ்வொரு வருடமும் மருதுபாண்டியர் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி போன்ற நிகழ்ச்சிகளை முன்னிட்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களை தாறுமாறாக ஓட்டி கோரிப்பாளையம் மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி வழியாக ஊர்வலம் சென்று வருவார்கள். இதே போல தத்தனேரி மயானத்திற்கு கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சவ ஊர்வலம் இந்த கல்லூரி வழியாக தான் செல்கிறது. எனவே இங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘நிர்பயா நிதி’ என்ற பெயரில் குறிப்பிட்ட தொகையை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
எனவே அந்த நிதியின் கீழ் தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நுழைவாயிலில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் பினேகாஸ் ஆஜராகி, பெண்களுக்கும், மாணவிகளுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால் நிர்பயா நிதியின் கீழ் பல்வேறு மாநிலங்களில் உரிய பாதுகாப்பை பெண்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து உள்ளனர். தமிழகத்தில் அது போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், குழந்தைகள், பெண்கள், மாணவிகளுக்கு தகுந்த பாதுகாப்பை அளிப்பது அரசின் கடமை. ஆனால் இது சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்ற கேள்வி எழுப்பினர்.
பின்னர் இந்த வழக்கு குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்