
திருடிய பணத்தில் புது மோட்டார் சைக்கிள் – வாட்ஸ்அப் ஸ்டேட்டசால் சிக்கிய வாலிபர்கள்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள பொந்துகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனிச்சாமி(50).
பழ வியாபாரியான இவர் கடந்த 23-ந் தேதி இரவு தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மினி வேனில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதிக்கு பழ வியாபாரத்திற்கு சென்றார். வியாபாரத்தை முடித்து விட்டு 24-ந் தேதி இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பணம் ரூ.1லட்சத்து 2 ஆயிரம் ரொக்கம் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்து முனிச்சாமி பாலமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் முனிச்சாமி வீட்டின் அருகே வசிக்கும் வெள்ளைச்சாமி (வயது19), சேது (20), கேசவன் (21) ஆகியோர் புதிய மோட்டார் சைக்கிளை வாங்கி உள்ளனர். அதனை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்சில் வைத்தனர். அதனை பார்த்த முனிச்சாமிக்கு, வேலைக்கு செல்லாத 3 பேரும் எப்படி புதிய மோட்டார் சைக்கிளை வாங்கினார்கள் என்ற சந்தேகம் இருந்தது.
தனது வீட்டில் நடந்த திருட்டில் அவர்களுக்கு தொடர்பு இருக்கலாம்? என கருதி பாலமேடு போலீசில் முனிச்சாமி புகார் தெரிவித்தார். அதன்பேரில் பாலமேடு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் வெள்ளைச்சாமி, சேது, கேசவன் ஆகிய 3 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அதில், இவர்கள் சம்பவத்தன்று முனிச்சாமி வீட்டில் பணத்தை திருடியதும், அதன் மூலம் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
பழ வியாபாரியின் வீட்டில் பணத்தை திருடிய வாலிபர்கள், அதன் மூலம் வாங்கிய புதிய மோட்டார் சைக்கிள் படத்தை வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்ததால் மாட்டிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
