
இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு- போதை வாலிபர்கள் 2 பேர் கைது
மதுரை ஆழ்வார்புரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி திவ்யா (வயது 28). இவர்களது வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த சிலர் எந்த நேரமும் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் அங்குள்ள பெண்களையும் கேலி கிண்டல் செய்ததாக தெரிகிறது. நாளுக்கு நாள் போதை கும்பலின் தொந்தரவு அதிகமாகவே திவ்யா அவர்களை கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் அந்த கும்பல் கடந்த சில நாட்களாக திவ்யா வீட்டு முன்பு பீர் பாட்டில்களை உடைத்து விட்டு சென்றது. சம்பவத்தன்று இதுதொடர்பாக திவ்யா அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக மதிச்சியம் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் இன்று அதிகாலை திவ்யா வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில் அந்த குண்டுகள் வீட்டின் முன்பு விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. சத்தம் கேட்டு அந்த பகுதியினர் திரண்டனர். உடனே அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பியது.
இதுகுறித்து தகவல் அறிந்த மதிச்சியம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர், சோணைமுத்து ஆகிய 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
