பாலிஷ் செய்து தருவதாக கூறி பெண்ணிடம் 5 பவுன் நகை அபேஸ்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கூழாண்டிபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி அன்ன மயில் (வயது 70). இவர் தனது மகன் வீரமணியுடன் வசித்து வருகிறார்.
நேற்று காலை அன்னமயில் தனது வீட்டின் முன்பு அமர்ந்திருந்தார். அப்போது 40 வயது மதிக்கத்தக்க 2 நபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் அன்னமயிலிடம் தாங்கள் நகையை பாலிஷ் செய்து கொடுக்கும் தொழில் செய்து வருவதாகவும், உங்கள் நகையை கொடுத்தால் பாலிஷ் செய்து கொடுப்போம் என கூறியுள்ளனர்.
இதை நம்பிய அன்னமயில் தன் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க செயினை பாலிஷ் போட அவர்களிடம் கொடுத்துள்ளார். மர்ம நபர்களும் சிறிது நேரம் பாலீஷ் போடுவதுபோல் நடித்து அன்னமயிலிடம் கவரிங் நகையை கொடுத்து 5 பவுன் செயினை அபேஸ் செய்து தப்பினர். நகை மினுமினுப்பதை பார்த்து அன்னமயிலும் நம்பிவிட்டார்.
சிறிது நேரம் கழித்து பார்த்தபோது 2 பேரும் கவரிங் நகையை கொடுத்துவிட்டு தங்க செயினை திருடி சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அன்னமயில் இதுகுறித்து வாடிப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் நித்யபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.