
பட்டா கத்தியுடன் வீடியோ வெளியிட்ட மேலும் ஒரு வாலிபர் கைது
கோவை கோர்ட்டு முன்பு கோகுல் என்ற வாலிபரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இன்ஸ்டாகிராமில் யார் பெரிய ஆள்? என்ற போட்டியில் பழிக்கு பழியாக கொலை நடந்தது தெரியவந்தது.
தொடர்ந்து மாநகர போலீசார் நடத்திய விசாரணையில் இன்ஸ்டாகிராமில் கத்தி, அரிவாள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் சிலர் தங்களது எதிர்கும்பலை மிரட்டுவதற்காக மாறி மாறி வீடியோக்களை பதிவு செய்தது தெரியவந்தது. இதனை மாநகர சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட தமன்னா என்ற பெண் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில், குனியமுத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாராவது ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டுள்ளனரா என்று கண்காணித்து வந்தனர். அப்போது, ‘பாடு கேப்டன் 666’ என்ற பக்கத்தில் பட்டா கத்தியுடன் ஒரு வாலிபர் வீடியோ வெளியிட்டதை அவர் பார்த்தார்.
இதனையடுத்து போலீசார் அவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சுந்தராபுரம் அருகே உள்ள அம்மணியம்மாள் காலனியை சேர்ந்த கவுதம் (வயது 20) என்பது தெரியவந்தது. இவர் அந்த பகுதியில் உள்ள பேக்கரியில் ஊழியராக வேலைபார்த்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கவுதம் மீது ஆயுத தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

