
போக்குவரத்துக்கு இடையூறாக பட்டாசு வெடித்த 3 பேர் கைது
மதுரை செல்லூரில் திருமண விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில், பொதுமக்கள் சட்டவிரோதமாக வெடி போடுவது வழக்கத்தில் உள்ளது. இதற்கு போலீசிடம் முறைப்படி அனுமதி வாங்க வேண்டும். ஆனாலும் பலர் அப்படி செய்வதில்லை. போலீசாருக்கு தெரியாது என்று நினைப்பில் வெடி போட்டு மகிழ்கின்றனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது என்று செல்லூர் போலீசுக்கு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் போலீசார் நேற்று காலை முதல் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
அய்யனார் கோவில் மெயின் ரோடு திருமண மண்டபம் முன்பு போலீசாரின் அனுமதியின்றி பட்டாசு வெடித்து போக்கு வரத்துக்கு இடையூறு விளைவித்த, மேலக்குயில்குடி, கீழத் தெருவை சேர்ந்த ராஜா(35) கைது செய்யப்பட்டார்.
செல்லூர் அய்யனார் கோவில் மெயின்ரோடு, ஆர்.எஸ்.நாயுடு தெரு சந்திப்பில் சட்ட விரோதமாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் (39), கணேசன் (42) ஆகியோரையும் செல்லூர் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் செல்லூர் போலீஸ் நிலையத்தில் தீ விபத்து நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தீ விபத்துக்கு பேட்டரி மின்கசிவு தான் காரணம் என்ற போதிலும், தனிப்படை போலீசார் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
