வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்டு- போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அதிரடி நடவடிக்கை
சென்னையில் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவது என்பது காவல் துறையில் கரும் புள்ளியாகவே எப்போதும் இருந்து வருகிறது.
சிக்னல்களில் நின்றபடி லாரிகள், சரக்கு வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்கும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டே இருக்கின்றன. செல்போன்களின் ஆதிக்கம் அதிகமான பின்னர் பொது மக்களே இது போன்ற வீடியோக்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் சென்னை திருமங்கலத்தில் போக்குவரத்து போலீசார் இருவர் லஞ்சம் வாங்கும்போது வீடியோவில் சிக்கி உள்ளனர். திருமங்கலம் போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், ஏட்டு பாலாஜி ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள போலீஸ் பூத்தில் வைத்து வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோ போலீஸ் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கரிடம், இதுபற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெகடர் ஜெய்சங்கர், ஏட்டு பாலாஜி ஆகிய இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவர் மீதும் துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது. எத்தனை பேரிடம் லஞ்சம் வாங்கினர்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.