குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க துணை மேயர் நடவடிக்கை
மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகிலுள்ள தீயணைப்பு நிலையம் எதிரே, போக்குவரத்து சாலை உள்ளது. இங்கு குடிநீர் குழாய் பதிப்பதற்காக, பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. அதன் பிறகு அங்கு போக்குவரத்து சாலை சமன்படுத்தப்பட வில்லை.
எனவே அங்கு ரோடுகள் மேடும்- பள்ளமுமாக காட்சியளித்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் மேடு- பள்ளம், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் இன்று காலை, மாமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டு சென்றார். அப்போது தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள போக்குவரத்து சாலையில் மேடு- பள்ளங்கள் இருப்பது தெரியவந்தது.
எனவே துணை மேயர் உடனடியாக காரில் இருந்து இறங்கினார். அதன்பிறகு அவர் செல்போன் மூலம், மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டார். இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது துணை மேயர் போக்குவரத்து சாலையில் மேடு பள்ளம் தொடர்பாக, அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து அங்கு சீரமைப்பு பணிகள் தொடங்கியது. சாலை சீரமைக்கப்பட்ட பிறகுதான் அவர், சம்பவ இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். துணைமேயரின் நடவடிக்கைக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்த னர்.