Police Department News

அரும்பாக்கம் பகுதியில் குட்கா பதுக்கிய வீட்டிற்கு சீல்: வடமாநில வாலிபர் உள்பட இருவர் கைது, வீட்டு உரிமையாளருக்கு ரூ.25000 அபராதம்

அரும்பாக்கம் பகுதியில் குட்கா பதுக்கிய வீட்டிற்கு சீல்: வடமாநில வாலிபர் உள்பட இருவர் கைது, வீட்டு உரிமையாளருக்கு ரூ.25000 அபராதம்

அரும்பாக்கத்தில் குட்கா பதுக்கிய வீட்டிற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், வீட்டின் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்தபடி, பெட்டிக் கடைகளுக்கு குட்கா விற்பனை செய்து வந்த வடபழனியை சேர்ந்த பன்னீர் (45) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அதில், வடமாநில வாலிபர் மூலமாக குட்கா வாங்கி, அதை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்தது தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் பேரில், பீகார் மாநிலத்தை சேர்ந்த கிஷோர் குமார் (25) என்பவரை கைது செய்தனர். இவர், அரும்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் வாடகை வீட்டில் தங்கி, குட்கா சப்ளை செய்தது தெரிந்தது.

இதையடுத்து, கோயம்பேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெபராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் கிஷோர் குமார் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கு 100 கிலோ குட்கா இருந்தது. அதை பறிமுதல் செய்தனர்.இதையடுத்து, அந்த வீட்டிற்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெபராஜ் சீல் வைத்தார். மேலும், வீட்டை வாடகைக்கு கொடுத்த உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். பின்னர், கைதான கிஷோர்குமார், பன்னீர் ஆகியோரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைக்கும் வீடுகளுக்கும், விற்பனை செய்யும் கடைகளுக்கும் சீல் வைக்கப்படும். வீட்டின் உரிமையாளர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்’’, என்றனர்.

Leave a Reply

Your email address will not be published.