கோவையில் ஒரே நாளில் பள்ளி மாணவி உள்பட 3 பேர் மாயம்
கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கோவை டாடாபாத்தில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார்.
அவரது பெற்றோர் அக்கம்பக்கம் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் ஸ்ரீநிதி (21). இவர் கோவை பீளமேட்டில் தனியார் விடுதியில் தங்கி அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று விடுதியில் இருந்த ஸ்ரீநிதி திடீரென யாரிடமும் கூறாமல் வெளியே சென்று விட்டார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் விடுதிக்கு திரும்பவில்லை.
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அருகே சாமிபுதூரை சேர்ந்தவர் ரம்யா(19). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறினார், ஆனால் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர் ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்த 2 சம்பவங்கள் குறித்தும் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்களை தேடி வருகின்றனர்.